நடிகைகள் ஆடை குறித்து ஆபாச பேச்சு; தெலுங்கு நடிகர் சிவாஜிக்கு மகளிர் ஆணையம் சம்மன்: கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்டார்

 

ஐதராபாத்: நடிகைகள் அணியும் ஆடை குறித்துப் பொது மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கு நடிகர் சிவாஜி, மகளிர் ஆணையத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சிவாஜி, தனது நடிப்பில் வெளியாகவுள்ள ‘தண்டோரா’ படத்தின் வெளியீட்டு விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘பெண்கள் கவர்ச்சியாக உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும், புடவை அல்லது உடல் முழுவதையும் மூடும் ஆடைகளை அணிவதே அழகு’ என்று கூறியதுடன், முகம் சுளிக்கும் வகையில் சில தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியிருந்தார்.

மேலும், ‘பெண்கள் கண்ணியமாக உடை அணிந்தால் மட்டுமே பொது இடங்களில் பாலியல் சீண்டல்களில் இருந்து தப்ப முடியும்’ என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்கு நடிகை அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து கவனித்த தெலுங்கானா மாநில மகளிர் ஆணையம், இது ஒட்டுமொத்தப் பெண்களையும் இழிவுபடுத்துவதாகக் கூறி, நடிகர் சிவாஜியை வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், நடிகர் சிவாஜி நேற்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், ‘எனது நோக்கம் பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்து நல்ல அறிவுரை வழங்குவதாகவே இருந்தது. ஆனால் நான் பயன்படுத்திய வார்த்தைகள் வரம்பு மீறியதாக அமைந்துவிட்டது. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். பெண்களை நான் மகாசக்தியாகவும், இயற்கையாகவும் மதிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆடை விவகாரத்தில் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகர், தற்போது தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தாலும், மகளிர் ஆணைய விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related Stories: