டெல்லி: இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் போட்டியை அதிகரிக்கும் வகையில், இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. Al Hind Air மற்றும் FlyExpress ஆகிய புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கியது. 2024ல் தடையில்லாச் சான்றிதழ் பெற்றிருந்த Shankh Air நிறுவனம், விரைவில் தனது சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, பணியாளர் சுழற்சி முறை மற்றும் விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, லட்சக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தற்போது இந்திய விமானச் சந்தையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களே வைத்துள்ளன. இத்தகைய சூழலில், ஒரு நிறுவனத்தில் ஏற்படும் பாதிப்பு ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும் முடக்குவதைத் தவிர்க்க, புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இது குறித்துத் தெரிவிக்கையில், கடந்த வாரத்தில் மூன்று புதிய நிறுவனங்களின் குழுக்களுடன் ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
மேலும் “கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘அல் ஹிந்த்'(Al Hind Air) குழுமத்தின் புதிய முயற்சி. இது கொச்சினிலிருந்து தனது சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பிளை எக்ஸ்பிரஸ் (FlyExpress) தனது சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சங்க் ஏர் (Shankh Air) நிறுவனத்திற்கு ஏற்கனவே NOC வழங்கப்பட்டுள்ளது. இது லக்னோ, வாரணாசி போன்ற நகரங்களை இணைக்கும் வகையில் 2026-ல் சேவையைத் தொடங்கவுள்ளது.
ஒன்றிய அரசு வழங்கியுள்ள NOC என்பது ஆரம்பகட்ட அனுமதி மட்டுமே. இனி இந்த நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (DGCA) இருந்து ‘ஏர் ஆபரேட்டர் சான்றிதழை’ (AOC) பெற வேண்டும். இதற்கு தகுதியான விமானங்களைப் பெறுதல், பாதுகாப்பு சோதனைகள் மற்றும் நிதி வலிமையை நிரூபிப்பது அவசியமாகும்.
ஒன்றிய அரசின் ‘உடான்’ (UDAN) போன்ற திட்டங்கள் ஏற்கனவே சிறிய நகரங்களுக்கான விமான சேவையை மேம்படுத்தியுள்ளன. புதிய நிறுவனங்களின் வருகை பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்திலும், கூடுதல் தேர்வுகளுடனும் விமானப் பயணம் அமைய வழிவகுக்கும்,” என அமைச்சர் தெரிவித்தார்.
