தந்தையை வீட்டை விட்டு விரட்டிய 3 மகன்கள்; கடும் குளிரில் நெடுஞ்சாலையில் கிடந்த தந்தை: ஹரியானாவில் அரங்கேறிய மனிதநேயமற்ற செயல்

அம்பாலா: அரியானா மாநிலம் அம்பாலாவில், நடக்க முடியாத நிலையில் இருந்த முதியவரை அவரது மூன்று மகன்களே வீட்டை விட்டு துரத்தி, கடும் குளிரில் நெடுஞ்சாலை ஓரத்தில் தவிக்கவிட்ட மனிதாபிமானமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாலாவைச் சேர்ந்தவர் இந்திரஜித். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சமீபத்தில் இந்திரஜித்தின் காலில் கடுமையான தொற்று ஏற்பட்டதால், அவரால் எழுந்து நடக்க முடியாத நிலை உருவானது. தந்தையை பராமரிக்க விரும்பாத மகன்கள், அவரை வீட்டை விட்டு வெளியேற்றி, நள்ளிரவில் நெடுஞ்சாலை ஓரத்தில் அநாதையாக விட்டுச் சென்றனர்.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில், கடும் குளிரில் முதியவர் ஒருவர் சாலையில் நடுங்கிக் கொண்டிருப்பதை கண்ட ரோந்துப் படையினர், உடனடியாக தன்னார்வத் தொண்டு குழுவிற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த குழுவினர், அவரை மீட்டு அங்குள்ள அரசு சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்திரஜித்தை, இதுவரை அவரது உறவினர்களோ அல்லது மகன்களோ நேரில் வந்து பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தன்னார்வத் தொண்டு குழுவினர் கூறுகையில்; “தகவல் கிடைத்ததும் முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்ற தந்தையை இப்படி நடுத்தெருவில் விடுவது கண்டிக்கத்தக்கது,” என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

தந்தைக்கு இத்தகைய கொடூரத்தை செய்துவிட்டு தப்பியோடிய மகன்களைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: