பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாலமுருகன் (40). இவரது மனைவி புவனேஸ்வரி (39). இவர் பிரபல வங்கியின் பசவேஸ்வரா நகர் கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2011ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 18 மாதங்களாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். வேலையில்லாமல் இருந்த பாலமுருகன், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புவனேஸ்வரி தனது கணவருக்கு விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த பாலமுருகன், தனது மனைவியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். நேற்று இரவு 7 மணி அளவில், பணி முடிந்து புவனேஸ்வரி ராஜாஜிநகர் தொழிற்பேட்டை 1வது பிரதான சாலை வழியாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் 4 முதல் 5 குண்டுகள் புவனேஸ்வரியின் தலை மற்றும் கைகளில் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இந்த வெறிச்செயலை அரங்கேற்றிய பின்னர், பாலமுருகன் நேராக மாகடி சாலை காவல் நிலையத்திற்குச் சென்று, ‘நான் என் மனைவியைக் கொன்றுவிட்டேன்’ என வாக்குமூலம் அளித்து, கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியுடன் சரணடைந்தார். பாலமுருகனுக்குச் சட்டவிரோதமாகத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
