தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 3.68 கோடி வாக்காளர்கள் நீக்கம்: ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தகவல்

 

* உத்தரபிரதேச மாநிலத்தில் இன்னும் வெளியிடவில்லை

புதுடெல்லி: நாடு முழுவதும் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடந்த எஸ்ஐஆர் 2.0 கணக்கெடுப்பில் 3.68 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950ன் பிரிவு 21(3)ன் கீழ் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் பிரம்மாண்ட பணியைக் கையில் எடுத்தது. ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதி செய்யவும், போலியான மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களைக் கண்டறியவும் முதற்கட்டமாக பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 62 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அங்கு சட்டமன்ற தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது.

நாட்டின் பிற பகுதிகளிலும் இந்தத் தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆர் 2.0) மேற்கொள்ளத் தலைமை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்படி சட்டீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் 2ம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 321 மாவட்டங்களில் உள்ள 1,843 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 51 கோடி வாக்காளர்கள் இந்தச் சோதன வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டனர். இந்த 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் விபரங்களைச் சேகரிக்கும் பணி கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற்றது. இதற்காக அக்டோபர் 27ம் தேதி வரையிலான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான கணக்கெடுப்புப் படிவம் வழங்கப்பட்டது.

இப்பணிகளைச் சுமூகமாகவும், வாக்காளர்களுக்கு எளிமையான முறையிலும் செய்து முடிப்பதற்காக 5.3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ), 7.64 லட்சம் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் 321 மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் களமிறக்கப்பட்டனர். வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்கள் முந்தைய வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருந்தது. மாநிலங்கள் வாரியாக வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சமீபத்தில் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் தவிர 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

இந்தச் சோதனையில் நாடு முழுவதும் சுமார் 3.68 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 21 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாநில வாரியாகப் பார்க்கும்போது, தமிழகத்தில் மட்டும் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் (சுமார் 15.19 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாகக் குஜராத்தில் 73.73 லட்சம் பெயர்களும் (14.4 சதவீதம்), கேரளாவில் 24.08 லட்சம் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும் மத்தியப் பிரதேசத்தில் 42.74 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 41.84 லட்சம் பேரும், மேற்குவங்கத்தில் 58.21 லட்சம் பேரும், சட்டீஸ்கரில் 27 லட்சம் வாக்காளர்களும் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தியபோது மரணமடைந்தவர்கள், வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தவர்கள் மற்றும் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் உரியப் படிவத்தைப் பூர்த்தி செய்து கையொப்பமிட்டுத் தராதவர்களின் பெயர்களும் தற்காலிகமாகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்துள்ள இந்த வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்புப் பணியால் பெருமளவு வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Related Stories: