திருமணமாகி 2 மாதங்கள் ஆன நிலையில் ஓடும் ரயிலில் இருந்து குதித்து புதுமண தம்பதி தற்கொலை

*ரயிலில் சண்டையிடும் வீடியோ வைரல்

திருமலை : திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் ஓடும் ரயிலில் இருந்து குதித்து புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் ரயிலில் சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளதால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கருகுபில்லி அடுத்த ராவ்பள்ளியை சேர்ந்தவர் சிம்மாசலம்(25). இவரது மனைவி பவானி(19). இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்களாகிறது. சிம்மாசலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இதற்காக தனது மனைவியுடன் ஜகத்கிரிகுட்டா காந்திநகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் சிம்மாசலமும், பவானியும் கடந்த 18ம்தேதி இரவு, விஜயவாடாவில் உள்ள தங்கள் உறவினர்களின் வீட்டிற்கு செல்வதற்காக, செகந்திராபாத்தில் இருந்து மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர். ரயில் வாங்கப்பள்ளி- அலேரு இடையே சென்றபோது, திடீரென ரயில் படிக்கட்டில் இருந்து 2 பேரும் விழுந்து இறந்தனர்.

இதனை மறுநாள் காலை ரோந்து பணியில் ஈடுபட்ட டிராக்மேன் கண்டறிந்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் புவனகிரி ரயில்வே போலீஸ் ஜிஆர்பி கிருஷ்ணாராவ் மற்றும் போலீசார் அங்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புவனகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ரயிலில் பயணம் செய்த சிம்மாசலம், அவரது மனைவி பவானி இருவரும், ரயிலில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை, வீடியோ எடுத்த சக பயணி ஒருவர், ரயில் பெயருடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதனை கண்ட ரயில்வே போலீசார், இளம் தம்பதி இருவரும் கால் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், ஆத்திரத்தில் அடுத்தடுத்து 2 பேரும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: