பாஜக கூட்டணியில் திடீர் சலசலப்பு; ராஜ்யசபா ‘சீட்’ தராவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகுவேன்: ஒன்றிய அமைச்சர் திடீர் போர்க்கொடி

 

கயா: மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காவிட்டால் ஒன்றிய அமைச்சரவையில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் விலகப்போவதாக ஜிதன் ராம் மஞ்சி பகிரங்கமாக எச்சரித்துள்ளார். பீகாரில் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போதே, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் 15 தொகுதிகள் கேட்ட நிலையில், வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதில் 5 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்ற போதிலும், கூட்டணியில் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாகவும், உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அக்கட்சியின் தலைவர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், கயாவில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனரும் ஒன்றிய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பாஜக தலைமைக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார். அவர் பேசுகையில், ‘எதிர்வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு கண்டிப்பாக ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும்; அவ்வாறு வழங்கப்படாவிட்டால், நான் எனது ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்; மேலும் கூட்டணியிலிருந்து வெளியேறி தனிப் பாதையில் செல்லவும் தயங்கமாட்டேன். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் வகையில், வருங்காலத் தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராக கட்சியினர் இருக்க வேண்டும். தனித்துப் போட்டியிட்டு 100 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த கட்சித் தயாராக இருக்கிறது’ என்றார். இந்த கூட்டத்தில், ஜிதன் ராம் மஞ்சியின் மகனும், கட்சியின் தலைவருமான சந்தோஷ் குமார் சுமனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: