*தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல்
திருமலை : சேஷாச்சலம் காடுகளில் 3.90 ஏக்கரில் ரூ.4.25 கோடியில் மூலிகை வனம் அமைக்க தேவஸ்தானம் அரங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கலியுகத்தில் வாழும் தெய்வமாக விளங்கும் ஏழுமலையான் குடியிருக்கும் திருமலையில், இந்திய பாரம்பரிய மருத்துவத்திற்கு உயிர் கொடுக்கும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் முலிகை வனம் அமைக்கவும், ஆந்திர மாநில முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்படி, அரிய மற்றும் அழிந்து வரும் மருத்துவ தாவரங்களின் தாயகமாக இருக்கும் சேஷாச்சலம் காடுகளுக்கு உயிர் நாடியாக ஒரு தெய்வீக முலிகை வனம் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் மருத்துவ தாவரங்களை பாதுகாத்து பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். இதனால், தெய்வீக மருத்துவ வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு இலக்குகளுக்கு பங்களிக்கும். மேலும், தென்னிந்தியாவில் அமைக்கப்படும் மருத்துவ வனம், பக்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிறப்பு ஈர்ப்பாக இருக்கும்.
இதையடுத்து முலிகை வனம், திருமலையில் உள்ள ஜி.என்.சி. டோல் கேட் அருகே கீழ் செல்லும் மற்றும் மேல் வரும் மலைப்பாதை சாலைகளுக்கு இடையில் அமைந்துள்ள 3.90 ஏக்கர் நிலத்தில் இந்த தெய்வீக மருத்துவ வனத்தை உருவாக்க அதிகாரிகள் திட்டங்களை தயாரித்துள்ளனர். அடுத்த மாதம் இப்பணிகளை தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் மரக்கன்றுகள் நட்டு, வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தல் மற்றும் பக்தர்கள் பார்வையிட உள்கட்டமைப்பு வசதிகள், அமைத்த பிறகு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மருத்துவ வனமானது முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதற்காக ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்தி – அறிவியல் – இயற்கை சேர்க்கை
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைக்கும் தெய்வீக மருத்துவ வனம், தேஹ அதிக வனம், சுகன் வனம், பவித்ர வனம், பிரசாத வனம், பூஜா திரவ்ய வனம், ஜீவ ராசி வனம், கற்பக விருட்ச தாமம், முலிகை குண்டலி வனம், ரிது வனம், விசிஷ்ட விருட்ச வனம் மற்றும் மருத்துவ தாவரங்கள் போன்ற 13 சிறப்பு கருப்பொருள் சார்ந்த பிரிவுகளை கொண்டிருக்கும். இவை பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மருத்துவ அறிவியல் மற்றும் இயற்கையை பற்றிய புரிதலையும் மேம்படுத்தும். இதற்காக ரூ.4.25 கோடியில் 3.90 ஏக்கரில் உருவாக்கப்படுகிறது.
