நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: 100 நாள் வேலைக்கு மாற்றாக புதிய திட்டம் அமல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட விபி ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இதன் மூலம், 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக, மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்ட புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கடந்த 2005ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும். இதனால் இது 100 நாள் வேலை உறுதி திட்டம் என அழைக்கப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்து, ‘வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (விபி-ஜி ராம்-ஜி)’ என்ற புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன. மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதே, மகாத்மா காந்தி பெயர் நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது தவிர புதிய திட்டத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு 125 நாள் வேலை வழங்குவது, திட்டத்திற்கான நிதிசுமையை மத்திய, மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்வது ஆகியவை முக்கிய அம்சங்களாகும். இதுதவிர, அறுவடை காலத்தில் 60 நாட்கள் வரையிலும் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இதனால், இந்த மசோதாவானது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை சீர்குலைப்பதாகவும், மாநில உரிமைகளை பறிப்பதாகவும் எதிர்கட்சிகள் சார்ப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இது கிராமப்புற மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான திட்டம் என ஒன்றிய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், ஜி ராம் ஜி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும்.

Related Stories: