*எம்எல்ஏ பேச்சு
திருப்பதி : ஆந்திர மாநில முதல்வர் போலியோ இல்லாத மாநிலமாக மாற்ற கடுமையாக உழைத்து வருவதாக எம்எல்ஏ பேசினார். தேசிய போலியோ தினத்தையொட்டி, திருப்பதி எம்.ஆர்.பல்லி நகர்ப்புற சுகாதார மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஆரணி ஸ்ரீனிவாசலு கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்து பேசியதாவது:
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு உடலில் குறைபாடுகளை சந்திக்க நேரிடும்.
மேலும், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், இளைஞர் அணி தலைவர் மற்றும் மாநில கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் போலியோ இல்லாத மாநிலமாக மாற்ற கடுமையாக உழைத்து வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் அரசாங்கத்தின் உறுதியை ஆதரித்தால், போலியோ இல்லாத சமூகமாக ஆந்திர மாநிலம் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை நகராட்சி ஆணையர் பவானி பிரசாத் தொடங்கி வைத்து கூறியதாவது:
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில், 16 இடங்களில் பல்ஸ் போலியோ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொண்டு வந்து போலியோ தடுப்பு சொட்டு மருந்து செலுத்தி கொள்ள வேண்டும்.
மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் விடுபட்ட குழந்தைகளுக்கு அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 24ம் தேதி நகர்ப்புறங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இதையடுத்து தொலைதூர பகுதிகள், குடிசை பகுதிகள், அதிக ஆபத்துள்ள பகுதிகள் மற்றும் நாடோடி சமூகங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு செலுத்துவதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே, குழந்தைகளுக்கு கட்டாயமாக போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். நாட்டில் போலியோ ஏற்கனவே கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
