சபரிமலைக்கு செல்லும் போது வனப்பகுதியில் வழி தெரியாமல் தவித்த தமிழக பக்தர்கள்: 22 பேரை போலீஸ், வனத்துறை பத்திரமாக மீட்டனர்

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெரும்பாலான பக்தர்கள் பம்பை வரை வாகனங்களில் சென்று பின்னர் அங்கிருந்து சுமார் 5 கிமீ மலைப்பாதையில் நடந்து சன்னிதானத்திற்கு செல்கின்றனர். இது தவிர எருமேலி பாதை வழியாகவும், புல்மேடு பாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். இவை இரண்டும் வனப்பகுதிகள் ஆகும். எருமேலி பாதை 46 கிமீ தொலைவும், புல்மேடு பாதை 16 கிமீ தொலைவும் உள்ளது.

இப்பகுதிகள் வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதி என்பதால் மண்டல, மகரவிளக்கு சீசனில் மட்டுமே இந்தப் பாதைகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்தப் பாதைகளில் மட்டுமல்லாமல் சிலர் அனுமதிக்கப்படாத வனப்பாதைகளில் சபரிமலைக்கு செல்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்ற 22 பேர் அடங்கிய ஒரு குழுவினர் இதேபோல அச்சன்கோவில் வனப்பாதை வழியாக சென்று வழி தெரியாமல் சிக்கிய சம்பவம் தற்போது நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த ஹரி,குமார்,மகேஷ் உள்பட 22 பக்தர்கள் நேற்று முன்தினம் அச்சன்கோவிலில் இருந்து வனப்பாதை வழியாக சபரிமலைக்கு சென்றனர். ஆனால் சிறிது தூரம் சென்ற பின்னர் இவர்கள் திசை மாறி அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதனால் பயந்த அவர்கள் உடனடியாக சபரிமலை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விவரத்தை கூறினர். இதுகுறித்து அறிந்த பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி ஆனந்த் உடனடியாக பக்தர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார். அச்சன்கோவில் மற்றும் கோன்னி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசாரும், வனத்துறையினரும் வனப்பகுதிக்குள் சென்று அவர்களை தேடினர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அவர்களை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்பளம், பாயசத்துடன் விருந்து
சபரிமலையில் பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த பல வருடங்களாக காலையில் இட்லி, உப்புமா, மதியம் புலாவ், இரவு கஞ்சி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் பக்தர்களுக்கு மதியம் அப்பளம், பாயசம், பொரியல் மற்றும் 3 வகை கூட்டுகளுடன் கேரள விருந்து வழங்கப்படும் என்று சமீபத்தில் தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறியிருந்தார். இந்நிலையில் பக்தர்களுக்கு மதியம் கேரள விருந்து வழங்குவது நேற்று முதல் தொடங்கியது. பருப்பு, சாம்பார், ரசம், அவியல், பொரியல், ஊறுகாய், அப்பளம், பாயசம் ஆகியவை அடங்கிய விருந்து வழங்கப்படுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பக்தர்களுக்கு கேரள விருந்து வழங்கப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Related Stories: