16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப் பாதையை தவிர்க்க பக்தர்களுக்கு அறிவுறுத்தல்!

திருவனந்தபுரம்: 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப் பாதையை முதிய பக்தர்கள், உடல்நலப் பிரச்சனைகள் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் & சிறு குழந்தைகள் ஆகியோர் தவிர்க்க பத்தனம்திட்டா காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

சபரிமலைக்கு பெரும்பாலான பக்தர்கள் பம்பை வரை வாகனங்களில் சென்று பின்னர் அங்கிருந்து சுமார் 5 கிமீ மலைப்பாதையில் நடந்து சன்னிதானத்திற்கு செல்கின்றனர். இது தவிர எருமேலி பாதை வழியாகவும், புல்மேடு பாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.

இவை இரண்டும் வனப்பகுதிகள் ஆகும். எருமேலி பாதை 46 கிமீ தொலைவும், புல்மேடு பாதை 16 கிமீ தொலைவும் உள்ளது. இப்பகுதிகள் வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதி என்பதால் மண்டல, மகரவிளக்கு சீசனில் மட்டுமே இந்தப் பாதைகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப் பாதையை முதிய பக்தர்கள், உடல்நலப் பிரச்சனைகள் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குழந்தைகள் ஆகியோர் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ‘வண்டிப்பெரியார் சத்திரம் மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக நுழைய ஒரு நாளைக்கு 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.

Virtual Queue முன்பதிவு செய்யாத பக்தர்கள் பாரம்பரிய வனப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது. எருமேலி பாரம்பரிய வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக’சிறப்பு அனுமதிச் சீட்டு’ வழங்கப்படுவதாக பரவும் தகவல் வதந்தி’ என பத்தனம்திட்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சபரிமலைக்கு சில பக்தர்கள் அனுமதிக்கப்படாத வனப்பாதைகளிலும் செல்கின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த 22 பக்தர்கள் நேற்று முன்தினம் அச்சன்கோவிலில் இருந்து வனப்பாதை வழியாக சபரிமலைக்கு சென்றனர். ஆனால் சிறிது தூரம் சென்ற பின்னர் இவர்கள் திசை மாறி அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை போலீசாரும், வனத்துறையினரும் மீட்டனர்.

Related Stories: