மும்பை: மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்றும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணபலத்தை பயன்படுத்தியே ஆளும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டியுள்ளன. மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி அரசு நடக்கிறது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்நாவிசும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 1,602 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி 3,325 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த திடீர் வளர்ச்சி இயற்கையானது அல்ல என்றும், தேர்தல் ஆணையம் மற்றும் அரசு இயந்திரங்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதன் விளைவே இந்த வெற்றி என்றும் அரசியல் விமர்சகர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரால் சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த காலங்களை விட தற்போது 48 சதவீத இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 288 நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் ஆளும் மகாயுதி கூட்டணி 207 தலைவர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது. பாஜக 117 இடங்களையும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 53 இடங்களையும், அஜித் பவார் தரப்பு 37 இடங்களையும் பெற்றுள்ளன. அதேவேளையில், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு (காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே அணி) போதிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, நெருக்கடிகள் அளிக்கப்பட்டதால் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் 28 இடங்களிலும், உத்தவ் தாக்கரே அணி 9 இடங்களிலும், சரத் பவார் அணி 7 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘மகாராஷ்டிராவில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது; இந்தத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை, மாறாக ஏலம் விடப்பட்டுள்ளது. பணபலம் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தியே ஆளும் கூட்டணி இந்த வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளது. அரசு இயந்திரங்கள் அனைத்தும் ஆளும் தரப்பிற்கு ஆதரவாகவே செயல்பட்டன’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
எதிர்க்கட்சிகளின் இத்தகைய கடுமையான விமர்சனங்களுக்கு இடையே, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த வெற்றியை ‘வரவிருக்கும் மாநகராட்சித் தேர்தலுக்கான முன்னோட்டம்’ என்று வர்ணித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கிப் பெறப்பட்ட இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்று எதிர்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்ததாக ஆளும் தரப்பு கூறினாலும், கள நிலவரம் வேறாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றன.
