சென்னை: அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ 55க்கும் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி தரப்பு, பாஜவிற்கு 30க்கும் மேற்பட்ட தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜ, 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வென்றது. எனவே, இம்முறை 30க்கும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜ உறுதியாக உள்ளதாகவும் அதுவும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழலில் டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பாஜ ஒருபக்கம் கூடுதல் சீட் கேட்டு அழுத்தம் கொடுக்கும் நிலையில், மற்றொரு பக்கம் அதிமுக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முதல் 23ம்தேதி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், முதல் நாளான நேற்று மட்டும் நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு ரூ.15,000க்கும், புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு ரூ.5000க்கும் வழங்கப்பட்டு வருகிறது. போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, ரூ.15,000க்கு வரைவோலை எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில், 82 மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவதற்கான மனுவை அதிமுகவின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பூர்த்தி செய்து தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் வழங்கினர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறும் வகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த கட்சியினர் ஏராளமானோர் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வாங்கி அவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
