தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் நியமனம்: தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் விரைவில் ஆலோசனை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இணை பொறுப்பாளர்களான 2 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடியுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. ஆனால், வேறு எந்த கட்சிகளும் இந்த கூட்டணியில் இன்னும் சேரவில்லை. சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மட்டும் நடந்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியது. அதில் பாஜ 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை பாஜ 60 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக 70 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து, அதில் 60 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவை வலியுறுத்த உள்ளது.

குறிப்பாக தலைநகரான சென்னையில் மட்டும் 8 தொகுதிகளை பாஜ கேட்டு வருகிறது. மேலும் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு தலா 3 பேர் வீதம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜ தயாரித்துள்ள தொகுதி பட்டியலுடன் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர் பாஜ போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளித்தார். அவரும் அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார். பாஜவின் இந்த 60 சீட் விவகாரம் என்பது அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சென்னையில் மட்டும் 8 தொகுதிகளை ஒதுக்கவே முடியாது. மேலும் கடந்த முறை அதிமுக வென்ற தொகுதிகளை ஒதுக்கவே முடியாது என்ற முடிவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குறைவான அளவில் சீட் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி என்ன முடிவு எடுக்க போகிறார்? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜ தனது தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் வகையில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர்கள் நியமித்துள்ளது. இந்த அறிவிப்பை பாஜ தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஒப்புதலுடன், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்டார்.

அதன்படி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் கூட்டுறவு துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 3 ஒன்றிய அமைச்சர்கள் விரைவில் தமிழகம் வந்து சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக பாஜ தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அப்போது எத்தனை தொகுதி என்ற விவரம் தெரிய வரும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் பியூஸ் கோயல். அமித்ஷாவுக்கு வலது கரம் போல் செயல்படுபவர். இதனால் அவர் மீண்டும் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் பியூஸ் கோயல். அமித்ஷாவுக்கு வலது கரம் போல் செயல்படுபவர்.

Related Stories: