பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை கோஷம்; ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி நாடாளுமன்றத்தில் பாஜவினர் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் நடத்திய பேரணியில் பிரதமர் மோடிக்கு கல்லறை தோண்டப்படும் என யாரோ சிலர் கோஷமிட்டது தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி நாடாளுமன்றத்தில் பாஜவினர் செய்த அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அதில், யாரோ ஒரு தொண்டர், ‘‘பிரதமர் மோடிக்கு கல்லறை தோண்டப்படும், அது இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுதினமோ செய்யப்படும்’’ என கோஷமிட்டது சில டிவி சேனல்களில் காட்டப்பட்டது. இந்நிலையில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியதும், இவ்விவகாரத்தை எழுப்பிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘நாங்கள் அரசியல் எதிரிகள், பகைவர்கள் அல்ல. காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடியின் கல்லறையை தோண்டுவதாக அக்கட்சியின் தொண்டர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம். பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் ரிஜிஜு இவ்விவகாரத்தை கிளப்பியதால் மீண்டும் அமளி ஏற்பட்டு, அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, அதன் பிறகு சுமூகமாக நடந்தது. இதே போல, மாநிலங்களவையில் பாஜ தேசிய தலைவர் நட்டா இவ்விவகாரத்தை கிளப்பினார். அப்போது அவர், ‘‘இதுபோன்ற முழக்கங்கள் காங்கிரசின் மனநிலை மற்றும் சிந்தனையை பிரதிபலிக்கிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்ததால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிரியங்கா காந்தி மறுப்பு
நாடாளுமன்றத்திற்கு வெளியே பேட்டி அளித்த காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ‘‘ஒன்றிய அமைச்சர்களே நாடாளுமன்ற அவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பது குறித்து ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் கூறுவது போன்ற முழக்கங்கள் காங்கிரஸ் பேரணி மேடையில் எழுப்பப்படவில்லை. கூட்டத்தில் யாரோ ஒருவர் அல்லது கட்சி தொண்டர் எழுப்பியிருக்கிறார். யார் சொன்னார் என்றே தெரியாத நிலையில், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய அவசியம் என்ன? நாடாளுமன்றம் செயல்படுவதை அரசு விரும்பவில்லை’’ என்றார்.

Related Stories: