கரூர்: நீதிபதிகள் குறிப்பிட்ட மதத்திற்கு சாதகமாக செயல்படுவது அவர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு விரோதமானது என பெ.சண்முகம் கூறியுள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகார் வெற்றியால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கிற ஒரு நிலையில்தான் ஒன்றிய பாஜ அரசாங்கம் உள்ளது.
புதிய மின்சார சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏற்கனவே தமிழ்நாட்டில் விவசாயிகள் அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய இலவச மின்சாரம், விசைத்தறி, கைத்தறி இப்படி பல்வேறு துறை சார்ந்த சிறு உற்பத்தியாளர்களுக்கு வழங்கக்கூடிய மானிய விலை மின்சாரம் எல்லாமே இல்லாமல் போகும். மின்சார கட்டமைப்புக்குள் தனியார் அனுமதிக்கப்பட்டு ஆண்டுதோறும் கட்டணத்தை ஏற்றுவதற்கான வாய்ப்பு இந்த சட்டத்தால் இருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பு பிறப்பித்த நீதிபதி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியா கூட்டணி எம்பிக்கள் கையொப்பமிட்டு, சபாநாயகரிடம் வழங்கி இருக்கிறார்கள். நீதிபதிகள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சாதகமாக செயல்படுவது என்பது அவர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது. நீதிபதிகள் வரம்பு மீறி பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இது மாநில அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் மோதல் போக்கை உண்டாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனை நீதிபதிகளே தமிழகம் போன்ற அமைதியான மாநிலங்களில் உருவாக்குவது என்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
