ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி துரோகி என்று தொடர்ந்து குற்றம்சாட்டுவதால் பாமகவில் இருந்து விலக தயார்: தந்தை-மகனை பிரித்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்

சென்னை: என்னை துரோகி என்று அன்புமணி குற்றம்சாட்டுவதால் பாமகவில் இருந்து நானும் எனது மகனும் விலகுகிறோம் என்றும், எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: என்னை துரோகி என்று அன்புமணி கூறியது வேதனையாக உள்ளது. நான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ செய்யவில்லை. அன்புமணியின் செயல்பாடுகளால் தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். அன்புமணி என்னிடம் வந்து ஒன்றிய அமைச்சர் பதவி கேட்கக் கூறினார். நான் ராமதாசிடம் பேசி, நீங்கள் பதவிக்கு வரமாட்டேன் என்கிறீர்கள். உங்கள் மகனையாவது அமைச்சராக்கலாம் என்றேன். அவர் கடுமையாக என்னிடம் கோபப்பட்டார்.

அதன்பிறகு, காடுவெட்டி குருவை அழைத்து சென்று மீண்டும் ராமதாசிடம் பேசினோம். அவரும் வற்புறுத்தினார். அதன்பிறகு, அன்புமணியை அமைச்சராக்க ராமதாஸ் ஒப்புக்கொண்டார். பாமக கூட்டணி குறித்து எந்த தலைவர்களுடனும் நான் தான் பேசுவேன். ஒருமுறை என்னிடம் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நீங்கள்தான் போகவேண்டும் என்று ராமதாஸ் கூறினார். நான் அன்புமணியை பரிந்துரைத்தேன். அவரைத் தான் மாநிலங்களவை உறுப்பினராக்கினோம். ராமதாஸ் பலமுறை சிறைக்கு போனார். அன்புமணி எத்தனை முறை சிறைக்கு போனார்.

அன்புமணியை யாரும் சந்திக்க முடியவில்லை என்று நிர்வாகிகள் ராமதாசிடம் வந்து சொன்னார்கள். பாமக தனித்து போட்டியிட்டபோது, அன்புமணிதான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இப்படி, அவருக்கு எந்த கெடுதலும் செய்யாத என்னைப் பார்த்து துரோகி, அப்பாவையும், என்னையும் பிரித்துவிட்டார் என்கிறார். ராமதாசும், அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் பேசியதால் தான் இத்தனை பிரச்சினை ஆரம்பித்தது. ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும்.

அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது. என் அப்பாவுக்கு அடுத்ததாக உங்களை நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி. பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு நான் காரணம் என பேசியிருக்கிறார் அன்புமணி. பாமகவில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே. கட்சியில் பிரச்சினை இருக்கும் போது, விருப்ப மனு வாங்குவது மோசடி வேலையாகும். ராமதாஸ்- அன்புமணி ஒன்று சேர தயார் என்றால் நான் கட்சியிலிருந்து விலகத் தயார். நானோ என் குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்து விடுகிறேன். வேறு கட்சியிலும் இணைய மாட்டோம், அவர்களாக அழைத்தால் பாமகவில் இணைகிறோம். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுத்தது நான் தான் என அன்புமணி அவதூறாக பேசி வருகிறார். ஆட்சி மாற்றம் காரணமாக அந்த இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு நான் எப்படி காரணமாவேன்?. இவ்வாறு அவர் கூறினார்.

* ஜி.கே மணிக்கு பாமக வழக்கறிஞர் பாலு பதிலடி ஐயாவிடம் போய் தூபம் போட்டு, எண்ணெய் ஊற்றி, தூண்டிவிட்டு வந்தீர்கள்: பாமக தொண்டர்கள் முழுமையாக அன்புமணி பின்னால் இருக்கிறார்கள்
சென்னை: பாமக தொண்டர்கள் முழுமையாக அன்புமணி பின்னால் இருக்கிறார்கள் என ஜி.கே மணிக்கு பாமக வழக்கறிஞர் பாலு பதிலடி கொடுத்துள்ளார். நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி: ஜி.கே.மணி கொடுத்த பேட்டியின் தேவை என்ன, நோக்கம் என்ன என்பதை அவரே விளக்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்லி, வட மாநிலங்களைச் சேர்ந்த 50-100 பேரை வைத்து நாடகம் அரங்கேற்றினார்கள். தமிழகமே சிரிக்கும் அளவுக்கு அது இருந்தது.

அதேபோல், டாக்டர் ஐயா (ராமதாஸ்) சென்னையில் போராட்டம் நடத்தினால் எவ்வளவு பெரிய கூட்டம் இருக்கும்? ஆனால் சமீபத்தில் அழைத்து நடத்திய போராட்டத்தில் வெறும் காலி நாற்காலிகள்தான் இருந்தன. இதனால் அவர்கள் வெறுப்பிலும் வேதனையிலும் இருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக நாங்கள் விருப்ப மனு விண்ணப்பங்களை வாங்கி வருகிறோம். நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் திருவிழா போல பனையூருக்கு வந்து விண்ணப்பம் கொடுத்து வருகிறார்கள். இதை அவர்களால் தாங்க முடியவில்லை.

சின்னையாவை (அன்புமணி) ஒன்றிய அமைச்சர் ஆக்கியது நான்தான் என்கிறார். இது பழைய செய்தி. ஆனால் பிரச்சனை ஏற்பட்ட போது சமரசம் செய்ய நான் கடுமையாக முயற்சி செய்தேன் என்று சொல்கிறார். நான் ஜி.கே.மணியிடம் கேட்கிறேன் பிரச்சனை ஏற்பட்டு ஐயாவும் சின்னையாவும் சந்திக்க முடியாத சூழல் வந்த பிறகு, எத்தனை முறை நீங்கள் ஐயாவை சந்தித்தீர்கள்? பலமுறை போய் பேசினீர்கள். ஆனால் சின்னையாவை சமாதானத்துக்காக எத்தனை முறை சந்தித்தீர்கள்? ஒரு முறைகூட இல்லை. ஐயாவிடம் போய் தூபம் போட்டு, எண்ணெய் ஊற்றி, தூண்டிவிட்டு வந்தீர்கள். இதைத்தான் செய்தீர்கள். பகிரங்கமாக சொல்கிறேன், சமாதானம் செய்கிறேன் என்று சொன்னீர்களா? அப்படியென்றால் ஐயாவை மட்டும் ஏன் பலமுறை சந்தித்தீர்கள்.

அவர் என்னிடம் சொல்லட்டும் இருவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து சமாதான முயற்சி செய்தேன் என்று. நாங்கள்தான் பலமுறை முயற்சி செய்தோம்.மேலும் அவர் சொல்கிறார். ‘25 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். கட்சி விதிப்படி நிறுவனருக்குத்தான் எல்லா அதிகாரமும் உண்டு. பொதுக்குழு, செயற்குழு கூட்ட அழைப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் ஐயாவுக்குத்தான் உண்டு’ என்று. 25 ஆண்டுகளாக கட்சித் தலைவராக இருந்தவர், கட்சி விதி என்னவென்றே தெரியாமல் பேசுகிறார். விதி 13ல் ஐயா எந்தக் கூட்டத்துக்கும் அழைக்கப்பட வேண்டும், அவரது வழிகாட்டுதலின்படி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

அதைத் தவிர கட்சித் தலைவர், செயலாளர், உயர்மட்டக் குழுவுக்கு உள்ள அதிகாரங்களில் ஐயா தலையிடவில்லை.இந்த விதிகளை உருவாக்கும் போது ஐயாவின் மனநிலை என்ன? கட்சியில் எந்தப் பதவியும் வைத்துக் கொள்ள மாட்டேன், தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பது. அப்படி இருந்தவரை இன்று ‘நான்தான் கட்சித் தலைவர்’ என்று சொல்ல வைத்திருக்கி றீர்கள். இவ்வாறு பாலு கூறினார். ஜி.கே.மணி கொடுத்த பேட்டியின் தேவை என்ன, நோக்கம் என்ன என்பதை அவரே விளக்க வேண்டும்.

Related Stories: