மும்பை: இந்தி நடிகர் ரோஹித் பாஸ்ஃபோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனோஜ் பாஜ்பாயுடன் ‘ஃபேமிலி மேன் 3’ வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்த ரோஹித், மர்மமான முறையில் இறந்து கிடந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரது உடல் ஏப்ரல் 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அசாமில் உள்ள கர்பாங்கா காட்டில் ஒரு நீர்வீழ்ச்சி அருகே கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல காயங்கள் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ரோஹித் நேற்று முன்தினம் பகல் 12:30 மணியளவில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றதாகவும், மாலை அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். பின்னர் ஒரு நண்பர் ரோஹித்தின் குடும்பத்திற்கு இந்த சம்பவம் குறித்து தெரிவித்திருக்கிறார். உடனடியாக அவரது உறவினர்கள் மாநில பேரிடர் மீட்புப் படையைத் தொடர்பு கொண்டு, காட்டில் இருந்து அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.