வல்லமை விமர்சனம்

கிராமத்தில் மனைவி மரணம் அடைந்ததால், மகள் திவ்யதர்ஷினியுடன் சென்னைக்கு வந்து, சினிமா போஸ்டர் ஒட்டி பிழைப்பு நடத்துகிறார் பிரேம்ஜி. அவரது மகள் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்கிறார். பள்ளியில் நடந்த சம்பவங்களை மகளிடம் கேட்டு, பாலியல் துன்புறுத்தலை நடத்திய பாதகனை கண்டுபிடிக்கிறார். பிறகு தந்தையும், மகளும் அவனை தீர்த்துக்கட்ட செல்கின்றனர். அது நடந்ததா என்பது மீதி கதை. ‘எளியவன் எதிர்த்து நின்றால், வலியவன் எம்மாத்திரம்?’ என்ற கருத்துடன் எழுதி இயக்கிய கருப்பையா முருகன், கிளைமாக்சில் சொல்லும் தீர்ப்பு விவாதத்துக்குரியது.

மகள்தான் உலகம், உயிர் என்று வாழும் எளிய மனிதனாக, குணச்சித்திர நடிப்பில் பிரேம்ஜி பளிச்சிடுகிறார். சிறுமி திவ்யதர்ஷினி, முதிர்ச்சியான பேச்சு மற்றும் நடிப்பில் மனதை உலுக்குகிறார். தீபா சங்கர், சி.ஆர்.ரெஜித், முத்துராமன், சூப்பர் குட் சுப்பிரமணி, ‘போராளி’ திலீபன், விது, சுப்பிரமணியன் மகாதேவன் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.

சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் எளிமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜிகேவியின் பின்னணி இசை மனதை உலுக்க மறந்துவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவாமல், பொறுப்புள்ள ஒரு டாக்டரே சட்டத்தை பற்றி குறை சொல்வது ஏற்க முடியாதது. தந்தையும், மகளும் மேற்கொள்ளும் முடிவு சினிமாத்தனம். பட உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

Related Stories: