அகமதாபாத் விமான விபத்தில் சினிமா இயக்குனர் பலியானது எப்படி?: 10 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு

புதுடெல்லி: கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. அகமதாபாத் மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விமானம் வெடித்தது. விமானத்தில் பயணித்த ஒரு நபரைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர். கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்ததால், மாணவர்கள் பலர் பலியாகினர். இந்த விபத்தில் மொத்தம் 270 பேர் இறந்தது தெரியவந்தது. பலியான பலரும் தீயில் உடல் கருகி அடையாளம் தெரியாத வகையில் இறந்தனர்.

இதனால் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டியிருந்தது. அதன்படி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் விபத்து நடந்து 10 நாட்கள் கழித்து. குஜராத்தி பட இயக்குனர் மகேஷ் ஜீராவாலா (34). இவர் விபத்து நடந்த 12ம் தேதி முதல் காணவில்லை. இது தொடர்பாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். அப்போது அவரது செல்போன், கடைசியாக விமான விபத்து நடந்த மருத்துவக் கல்லூரி விடுதி அருகே அவர் இருந்ததை காட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் நேற்று முன்தினம் வந்த அறிக்கையில் மகேஷ் ஜீராவாலாவும் இந்த விபத்தில் உயிரிழந்தது உறுதியானது. அன்றைய தினம் அவர் பயன்படுத்திய பைக், விபத்தில் எரிந்துபோனதும் தெரியவந்தது. இதை அறிந்து அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். மகேஷ் உடல் அவரது குடும்பத்தாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

The post அகமதாபாத் விமான விபத்தில் சினிமா இயக்குனர் பலியானது எப்படி?: 10 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: