வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் புதிய விளக்க மனு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை அபத்தமானது என்பது மட்டுமில்லாமல் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

டந்த இரு தினங்களுக்கு முன்பு வரையில் பீகார் மாநிலத்தில் சுமார் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்த சூழலில் பீகார் மாநில வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம் தொடர்பாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தரப்பில் ஒரு புதிய விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கேட்கும் 11 ஆவணங்களில் நிரந்தர குடியிருப்பு ஆவணம், பாஸ்போர்ட், ஓபிசி-எஸ்சி-எஸ்டி உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கைகளில் மட்டும் ஏன் வாக்காளர் அடையாள அட்டையை, ஆதாரை ஆதாரமாக தாக்கல் செய்யும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் மீது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது ஒரு அபத்தமான செயல் என்பது மட்டுமில்லாமல், ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாடு வாக்காளர்களின் வாக்குரிமையை இழக்கச் செய்யும் நோக்கமாக உள்ளது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் புதிய விளக்க மனு appeared first on Dinakaran.

Related Stories: