ஊர்க்காவல் படை ஆள்சேர்ப்பு முகாமில் மயங்கியவர் பீகாரில் ஆம்புலன்சில் பெண் கூட்டு பலாத்காரம்: 2 பேர் கைது

 

கயா: பீகாரில் அரசு ஆள் சேர்ப்பு முகாமில் மயங்கி விழுந்த பெண், ஆம்புலன்சில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அவலம் அரங்கேறி உள்ளது. பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி ஊர்க்காவல் படைக்கான ஆள்சேர்ப்பு முகாமில் உடல் தகுதி தேர்வு நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த 29 வயது பெண் ஒருவர் முகாமில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கயாவில் உள்ள அனுக்ரா நரேன் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.

மயக்கத்தில் இருந்தபோது ஆம்புலன்சுக்குள் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை புகாரின்படி, உடல் பரிசோதனையின் போது தான் சுயநினைவை இழந்ததாகவும், போக்குவரத்தின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து ஓரளவு மட்டுமே அறிந்திருந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.  பின்னர், ஆம்புலன்சில் இருந்த மூன்று முதல் நான்கு ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் காவல்துறைக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

அவரது அறிக்கையைத் தொடர்ந்து, புத் கயா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கயா மாவட்ட எஸ்பி ராமானந்த் குமார் கவுஷல் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்.” என தெரிவித்தார்.

* பேய்கள் ஆட்சி நடக்கிறது: தேஜஸ்வி கண்டனம்
இதுகுறித்து பீகார் பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தன் எக்ஸ் பதிவில், ‘நிதிஷ் அரசை அகற்று, பெண் குழந்தையை காப்பாற்று’ என்ற ஹேஷ்டேகுடன், “பீகாரில் பேய்களின் ஆட்சி நடக்கிறது. பெண் குழந்தைகளை காக்க தவறிய நிதிஷ் அரசை அகற்றுங்கள். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முதல்வர் நிதிஷ் குமாரும், அவரது இரண்டு சகாக்களும் மவுனம் கடைப்பிடிப்பது குற்றமாகும்’ என காட்டமாக விமர்சித்துள்ளார்.

The post ஊர்க்காவல் படை ஆள்சேர்ப்பு முகாமில் மயங்கியவர் பீகாரில் ஆம்புலன்சில் பெண் கூட்டு பலாத்காரம்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: