இதனால் லோயர்கேம்பில் துவங்கி கூடலூர், வெட்டுக்காடு, கே.ஜி பட்டி, என்.டி.பட்டி, சுருளிப்பட்டி, கம்பம், ராயப்பன்பட்டி கோகிலாபுரம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, சின்னமனூர், கோட்டூர், வீரபாண்டி, பிசிபட்டி வரையில் இடையே ஆங்காங்கே இருக்கின்ற மெகா தடுப்பணைகள் தண்ணீர் வரத்து இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து வறண்ட நிலையை எட்டியது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் 8 நாள் சித்திரைப் பெருந்திருவிழாவிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக முல்லைப் பெரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தடுப்பணைகளை கடந்து ஆற்றில் சென்று வருகிறது.
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நண்பகல் 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். இருந்த போதிலும் வேலை தாங்க முடியாத நிலையில் பொதுமக்கள் பலரும் ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என நீர்நிலைப் பகுதிகளை தேடி அங்கு சென்று தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வீடு திரும்பும் நிலை நீடித்து வருகிறது. இதனால் சின்னமனூர் அருகே எல்லப்பட்டி முல்லைப் பெரியாற்றுக்குள் இருக்கும் மார்க்கையன்கோட்டை நீண்ட மெகா தடுப்பணைக்கும், சின்னமனூர் அருகே மேல பூலானந்தபுரம் முல்லைப் பெரியாற்று சீலையம்பட்டி தடுப்பணைக்குள்ளும், ஆண்கள் பெண்கள் பொதுமக்கள் என கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அதேபோல் மேகமலை ,ஹைவேவி ஸ்,குமுளி தேக்கடி போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்கின்றவர்கள் மேற்படி இந்த இரண்டு தடுப்பணைகளுக்குள்ளும் சென்று ரசித்து விட்டு கடந்து வருகின்றனர்.
வீரபாண்டியிலும் குவிந்தனர்;
தேனி அருகே உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலை ஒட்டி முல்லையாறு செல்கிறது. இங்கு தடுப்பணை இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பயணிகள் ஆற்றில் குளித்துச் செல்ல விரும்புவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதாலும் தண்ணீர் வரத்து இருப்பதாலும் ஏராளமானோர் இங்கு வந்து குளித்துச் செல்கின்றனர். கடந்த மே 6ம் தேதி முதல் நேற்று வரை வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் களைகட்டியது. திருவிழாவுக்கு வந்தவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் குறைந்த தண்ணீரிலும் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதையடுத்து கோடை மழை தொடங்கியதால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் முல்லையாற்றில் குளிக்க வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து குறைந்துள்ளது.
இருந்த போதும் இங்கு குளிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள், குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். சித்திரை திருவிழா காலத்தில் வர முடியாத பக்தர்கள் பலரும் தற்போது கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அவர்களும் முல்லையாற்றில் உற்சாகமாக குளித்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். மேலும் தேனி பகுதியை கடந்து செல்லும் பயணிகளும் வீரபாண்டி வழியாக வந்து வாகனங்களை நிறுத்தி குளித்துச் செல்கின்றனர். இதனால் முல்லையாறு தடுப்பணை பகுதியில் கூட்டம் காணப்படுகிறது.
The post கொளுத்தும் வெயிலில் இருந்து எஸ்கேப் ஆக தடுப்பணைகளில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.