6 நாட்களில் 1 லட்சத்தை எட்டிய இன்ஜினியரிங் விண்ணப்ப பதிவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவானது கடந்த 7ம் தேதி தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பப் பதிவு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இணையதளவசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப்பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டை போலவே 110 தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பப் பதிவு மேற்கொள்வதற்கான கடைசி நாள் ஜூன் 6ம் தேதி ஆகும். விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 14,462 பேர் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் 6வது நாளான நேற்றைய தினம் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 48 ஆயிரத்து 323 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் 20 ஆயிரத்து 941 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

The post 6 நாட்களில் 1 லட்சத்தை எட்டிய இன்ஜினியரிங் விண்ணப்ப பதிவு appeared first on Dinakaran.

Related Stories: