ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பீகார் வாலிபர் பாலியல் தொல்லை: ஆன்லைனில் புகார்; உடனே கைது

சேலம்: கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து, பீகார் மாநிலம் பாட்னாவிற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே எக்ஸ்பிரஸ் ரயில் (06085) இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (3ம் தேதி) வந்த எர்ணாகுளம்-பாட்னா ரயிலில், எஸ்-6 முன்பதிவு பெட்டியில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைக்குரி பகுதியை சேர்ந்த 28, 22 வயது கொண்ட சகோதரிகள் பயணம் செய்தனர்.

இவர்கள் இருந்த இருக்கையின் அருகில், மற்றொரு இருக்கையில் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், திருப்பூரை கடந்து வந்தபோது, திடீரென 22 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். உடலில் பல்வேறு இடங்களில் தொட்டு, ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார். உடனே ஆன்லைன் மூலம் ரயில்வே போலீசில் இளம்பெண் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து பாட்னா எக்ஸ்பிரஸ், சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும், ரயில்வே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.விசாரணையில் அவர், பீகார் மாநிலம், சரண் மாவட்டம் சாரைசகோ டி டோலா பகுதியை சேர்ந்த ஜமதார் மகன் முன்னாகுமார் (32) எனத்தெரியவந்தது. அவர் மீது பாலியல் தொல்லை கொடுத்தது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர், சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

 

The post ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பீகார் வாலிபர் பாலியல் தொல்லை: ஆன்லைனில் புகார்; உடனே கைது appeared first on Dinakaran.

Related Stories: