2025 முதல் காலாண்டில் வீடுகள் பதிவு 88% அதிகரிப்பு வட சென்னையில் வீடுகள் விற்பனை அதிகரிப்பு: ரியல் எஸ்டேட் அமைப்பினர் தகவல்

சென்னை: 2025 – முதல் காலாண்டில் சென்னையில் வீடுகள் பதிவு 88 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தென் சென்னை முதலிடத்தில் இருந்தாலும், வட சென்னையில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் ரியல் எஸ்டேட் அமைப்பினர் தெரிவித்தனர். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல ரியல் எஸ்டேட் அமைப்பினர் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 2025ம் ஆண்டின் முதல் காலாண்டில், வீடுகள் பதிவு 88 சதவீத அதிகரித்துள்ளது. தென் சென்னை எப்போதும் போல முதலிடத்தில் உள்ளது. ஆனால், வடக்கு சென்னையும் வேகமாக வளர்ந்து வருகிறது. அரசின் முயற்சிகள் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற வசதிகள் இதற்கு காரணம். வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வட சென்னையை நோக்கி வர அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், விற்பனை அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 3 மாதங்களில் 8,042 வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 11% அதிகம், 3,783 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய காலாண்டை விட 7% அதிகம். கடந்த ஆண்டை விட 27% அதிகம். உடனடியாக குடிபோகும் வீடுகளையே பலரும் விரும்புகின்றனர்.
தெற்கு சென்னையில் 4,309 வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேல். அதே நேரத்தில், வடக்கு சென்னையும் வளர்ந்து வருகிறது. இங்கு தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அதிகம் உள்ளன. தற்போது, குடியிருப்பு பகுதிகளும் உருவாகி வருகின்றன. இது குறித்து ரியல் எஸ்டேட் அமைப்பினர் கூறியதாவது: சென்னையில் முதல் காலாண்டில் 61 புதிய குடியிருப்பு திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட குறைவு. கடந்த ஆண்டு இதே காலத்தில் 78 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 84 குடியிருப்பு திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 9,480 வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த காலாண்டை விட 34சதவீதம் அதிகம், கடந்த ஆண்டை விட 24சதவீதம் அதிகம்.

வட சென்னையில் வீடு விற்பனை அதிகரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மெட்ரோ ரயில் போன்ற வசதிகள் வந்துள்ளதால், இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வீடு விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக, குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கும் பகுதிகளில் விற்பனை சூடு பிடிக்கும். அரசின் உதவி மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீடு காரணமாக சென்னை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post 2025 முதல் காலாண்டில் வீடுகள் பதிவு 88% அதிகரிப்பு வட சென்னையில் வீடுகள் விற்பனை அதிகரிப்பு: ரியல் எஸ்டேட் அமைப்பினர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: