ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தால் ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே அதிரடி முடிவு

சென்னை: ரயில் படிக்கட்டில் பயணித்தால் ரூ.1000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயின் கீழ் தினமும் 350க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இப்படி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டுகளில் சாகச பயணம் செய்கின்றனர்.

இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது: ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் குற்ற சம்பவங்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டில் அமர்ந்தும், தொங்கியபடியும் சாகச பயணம் செய்கின்றனர். இது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 156ன் கீழ் குற்றமாகும். சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல், முன்பதிவு செய்யாத பயணிகளும், திடீரென முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிக்கிறார்கள். இதனால் முன்பதிவு செய்தவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனை தடுப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும், சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் உள்ளனர். 2 பாதுகாப்பு படையினருடன் ஒரு டிடிஆரும் உள்ளார்.

ரிசர்வ் பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் ஏறுகிறார்களா என்பதை கண்காணிக்கிறார்கள். யாராவது ஆக்கிரமித்திருந்தால் அந்த இடத்திலேயே அபராதமும் விதிக்கிறார்கள். உரிய டிக்கெட் இல்லை என்றால், கீழே இறக்கி விடப்பட்டு, முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுவர். டிக்கெட் இல்லாமல் வருவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. ரயில்வேயின் இந்த நடவடிக்கை முன்பதிவு செய்து பயணிப்போருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

The post ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தால் ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே அதிரடி முடிவு appeared first on Dinakaran.

Related Stories: