இதைத்தொடர்ந்து தன் மீது அரசியல் ரீதியாக தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஒரு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை கடந்த 23ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்று செந்தில் பாலாஜியிடம் கேட்டு சொல்லுங்கள் என திட்டவட்டமாக தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் மனுதாரர் ஆகியோர், தமிழ்நாட்டில் விரைவில் புதிய சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அப்போது செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிட்டு அமைச்சராக கூட ஆகலாம்.
ஆனால் அப்போது இந்த வழக்கானது விசாரணை நீதிமன்றத்தில் முடிய வாய்ப்பு கிடையாது. அதற்கு காலங்கள் ஆகும். எனவே அவர் எதிர்வரும் காலங்களில் எந்தவித பதவியும், பொறுப்பும் வகிக்கக் கூடாது. அதுகுறித்த புதிய கட்டுப்பாடுடன் கூடிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக அதிகாரம் இல்லாமல் இவரைப் போன்றவர்கள் நிறைய நாட்கள் இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் செந்தில் பாலாஜியின் முந்தைய நடத்தைகளை நாம் கவனத்தில் கொண்டால், அவர் மீண்டும் உத்தரவை மீறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் இப்படிப்பட்ட கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம் என்று வலியுறுத்தினர். இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, கபில் சிபல் மற்றும் ராம்சங்கர் ஆகியோர், இந்த வழக்கின் விசாரணை முடிய 15 அல்லது 20வது ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரையில் பொது வாழ்வில் இருக்கும் ஒரு நபரை எந்த பொறுப்பும் வகிக்கக் கூடாது என்று எப்படி கூற முடியும். அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தால் கண்டிப்பாக முடியாது என்று காட்டமாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அறிவிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. குறிப்பாக தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்ற வாதங்களை நாங்கள் ஏற்கிறோம். அந்த வகையில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் புதிய கட்டுப்பாடுகளோ அல்லது நிபந்தனையோ தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான பிரதான வழக்கில் அவர் ஜாமீன் கேட்டிருந்தபோது, தான் எந்தவித அதிகாரம் மற்றும் பதவியிலும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டி தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில்தான் அவருக்கு உச்ச நீதிமன்றதால் ஜாமீன் வழங்கப்பட்டதே தவிர, தகுதியின் அடிப்படையில் கிடையாது என்பதை தற்போது நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். மேலும் அடுத்து வரும் புதிய தேர்தல் குறித்து நாங்கள் எதுவும் கருத்து கூறவில்லை. தற்போது இருக்கும் இடைப்பட்ட காலத்தில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் என்றால், மனுதாரர் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் குறித்து உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உட்பட அனைத்தையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் புதிய கட்டுப்பாடுகள் தேவையில்லை: அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு appeared first on Dinakaran.