அரவக்குறிச்சி, ஏப்.26: அரவக்குறிச்சியில் சமுதாயக் கூடத்தில் இயங்கி வரும் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளதற்கு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் கடந்த 2022ம் ஆண்டு பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரவக்குறிச்சி மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள சமுதாய கூடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக தொடங்கப்பட்டது. போதிய இடப்பற்றாக்குறை மற்றும் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை கருத்தில் கொண்டு கல்லூரிக்கு சொந்த கட்டிடம் தேவை என பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கை விவாதத்தில் நேற்று உயர் கல்வித்துறை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை அரவக்குறிச்சி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்பட கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த கல்வியாளர்கள் கூறுகையில், அரவக்குறிச்சியில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது முதல் (கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக) சமுதாயக் கூடத்தில் இயங்கி வருகிறது.
இப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தங்களின் வீட்டு விஷேக நிகழ்ச்சிகளை தங்கள் வசதிக்கேற்ப இந்த சமுதாய கூடத்தில்தான் வைத்து நடத்துவது வழக்கம். இந்நிலையில் அங்கு அரசு கல்லூரி தொடங்கி வகுப்புகள் நடைபெற்று வருவதால், ஏழை, எளிய மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை எளிய முறையில் நடத்த முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கையின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தியாகும். எனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளபடி அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டினால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
மேலும் வெவ்வேறு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அரசு கல்லூரியில் பயில ஆர்வம் காட்டுவர். இதனால் சேர்க்கை விகிதமும் அதிகரிக்கும் என தெரிவித்தனர். எனவே விரைவில் அரவக்குறிச்சி அரசு கல்லூரிக்கான கட்டிடப்பணியை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதற்காக தமிழக முதல்வருக்கும், உயர்கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.
The post அரவக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு: சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையில் அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.