ராயக்கோட்டை, மே 12: ராயக்கோட்டையில் சாதாரண மழை பெய்தாலேயே, பஸ் நிலையத்தில் உள்ள பள்ளங்களில் சாக்கடை கலந்த மழைநீர் தேங்குகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ராயக்கோட்டையில் பஸ் நிலைய வளாகத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே சிமெண்ட் காரை மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சிறிது தூரல் மழை பெய்தால், இந்த குழிகளில் சாக்கடை கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கி விடுகிறது. மேலும், பஸ் நிலையம் வெளியே தர்மபுரி சாலையில் இருக்கும் நுழைவு வாயில் மற்றும் ஓசூர் சாலையில் பஸ்கள் வெளியே செல்லும் பகுதி ஆகிய இடங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த சாதாரண மழைக்கே, பஸ் நிலையம் மற்றும் வெளியே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிட்டது. பஸ்கள் மற்றும் சரக்கு லாரிகள் சென்று, சென்று பள்ளத்தில் உள்ள தண்ணீர் சேறும், சகதியுமானது. பயணிகள் சாலையில் செல்லும்போது, ேவகமாக வரும் வாகனங்களால் பள்ளத்தில் தேங்கிய சகதி நீர் தெளித்து ஆடைகள் அழுக்காகிறது. இதனால், பயந்தபடி மக்கள் சாலையில் செல்கின்றனர். ராயக்கோட்டை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலைய வளாகம் மற்றும் தர்மபுரி, ஓசூர் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post பஸ் ஸ்டாண்டில் தேங்கி நிற்கும் மழைநீர் appeared first on Dinakaran.