தோகைமலை, 11: தோகைமலை அருகே விரையாச்சிலை ஈஸ்வரர் கோயிலில் 33 ஆண்டுகளுக்கு பிறகு பெரியதேர் பெருவிழா இன்று நடைபெறுவதால் விழாக்கோலம் பூண்டுள்ளது. கரூர் மாவட்டம், தோகைமலை அருகே ஆர்.டி.மலை ஊராட்சி ஆர்.டி.மலையில் சோழ மாமன்னர்களால் நிறுவப்பட்ட சிவாலயம் பிரசித்திப் பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரர் மலைக்கோயில் அமைந்து உள்ளது. வடசேரி, பில்லூர், சேங்குடி நாட்டார்கள், தேர் திருவிழா மண்டகப்படிதாரர்கள், குடிபாட்டு பக்தர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் தேவஸ்தானத்தில் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. 10 நாள் பெரியதேர் திருவிழா நடத்துவதற்கு பரம்பரை அறங்காவலர் பொன்னம்பலம் தலைமையில் வடசேரி, பில்லூர், சேங்குடி நாட்டார்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் குடிபாட்டுக்காரர்கள் முடிவு செய்தனர்.
இதனை அடுத்து கோயில் முன்பாக இருந்த 627 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட பழமையான பெரியதேர் பழுதடைந்து இருந்தது. இதனால் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் பெல் நிறுவனம் மூலம் இரும்பு அச்சுகள் மற்றும் 4 இரும்பு சக்கரங்கள் உருவாக்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக 16 அடி 3 அங்குலம் உயரத்தில் 427 தெய்வீக சிற்பக்கலைகளுடன் அமைக்கப்பட்டது.
கடந்த 30 ஆம் தேதி தேர் வெள்ளோட்டம் நடந்தது. கடந்த 3ம் தேதி பரம்பரை அறங்காவலர் பொன்னம்பலம் தலைமையில் கொடி ஏற்றி திருவிழா தொடங்கியது. அன்று நாட்டார்கள் மற்றும் நாயக்கர்கள் மண்டகப்படி உபயத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடந்தது. 2வது நாள் உள்ளூர்வாசிகள் மற்றும் பிள்ளைமார்களின் மண்டகப்படி உபயத்தில் பூத வாகனம் மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடுகள், 3 வது நாள் ரெட்டியார்கள் மண்டகப்படி உபயமாக பூதவாகனம் மற்றும் அன்னவாகனத்திலும், 4ம் நாள் முத்துராஜாக்கள் மண்டகப்படி உபயமாக கைலாசவாகனம் மற்றும் அன்னவாகனத்திலும், 5ம் நாள் உடையார்கள் மண்டகப்படி உபயமாக ரிஷப வாகனம், அன்ன வாகனம், சின்ன ரிஷப வாகனம் மற்றும் மயில் வாகனங்களிலும், 6 வது நாள் செட்டியார்கள் மண்டகப்படி உபயத்தில் யானை வாகனம் மற்றும் அன்ன 7வது நாள் அன்று மலையமான் கவுண்டர்கள் உபயத்தின் போது புஷ்ப சாகனத்திலும், 8வது நாளான நேற்று இரவு வடசேரி, பில்லூர், சேங்குடி நாட்டார்களாகிய ஊராளிக்கவுண்டர்கள் உபயமாக குதிரை வாகனம் மற்றும் முத்துப்பல்லக்கிலும் சுவாமிகள் வீதிஉலா வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியதேர் பெருவிழாவானது 33 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரர் பெரியதேரிலும், பரிவார சுவாமிகள் 2 சின்ன தேர்களிலும் மொத்தம் 3 தேர்களில் சுவாமிகள் வீதி உலா வருகிறது. இந்த பெருவிழாவில் வடசேரி, பில்லூர், சேங்குடி நாட்டார்கள், தேர் திருவிழா மண்டகப்படிதாரர்கள், குடிபாட்டு பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
The post 33 ஆண்டுகளுக்குப்பின் இன்று விரையாச்சிலை ஈஸ்வரர் மலைக்கோயிலில் பெரியதேர் பெருவிழா: ஆர்.டி.மலை விழாக்கோலம் பூண்டது appeared first on Dinakaran.