12,273 தூய்மைப்பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

 


சென்னை: தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டைகள் 12,273 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான உதவி மையத்தை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்து நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும், தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த தகவல் கையேட்டினையும் வழங்கினார். மாநகராட்சியில் உள்ள தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் அனைத்து வகையிலான 17,659 தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் மற்றும் முறையான, முறைசாரா கழிவுநீர் சார்ந்த பணிகளில் ஈடுபடும் 17,627 தூய்மைப்பணியாளர்கள் என மொத்தம் 35,286 தூய்மைப்பணியாளர்களுக்கு நல வாரியத்தின் அடையாள அட்டைகள் பெற்று வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 12,273 பேருக்கு தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, செனாய் நகர், புல்லா அவென்யூவில் ரூ.15.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அவசரகால மகப்பேறு மருத்துவமனை, மஞ்சக்கொல்லை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூலதன நிதியின் கீழ், ரூ.3.71 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள், அமைந்தகரை சென்னை நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.4.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டிட பணி, வேலங்காடு மயானபூமியில் ரூ.98 லட்சம் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை மேயர் பிரியா பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில், ஆணையர் குமரகுருபரன், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், துணை ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 12,273 தூய்மைப்பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை appeared first on Dinakaran.

Related Stories: