இதையடுத்து போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் நந்தகுமார் (32), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தங்க நகை தொழில் செய்து வரும் ராஜேஷ், (35) மற்றும் ஜிஜேந்திர சிங் (45), பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்த மார்பிள் பிசினஸ் செய்து வரும் விபின் (44), காட்டூரை சேர்ந்த சவுந்தர் (29), மற்றும் விபுல் (36), ராம் நகரை சேர்ந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் அருண்குமார் (37) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம், 12 செல்போன், 2 கார், 2 பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தி வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் கூறியதாவது: கைதான நந்தகுமார், ராஜேஷ், ஜிஜேந்திர சிங், விபின், அருண்குமார் ஆகியோர் தொழிலதிபர்களாக இருந்து வருகின்றனர். இதை தவிர ஐபிஎல் போட்டியை குறிவைத்து ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் தடை செய்யப்பட்ட வெப் சைட்டுகளான மேங்கோ, லோட்டஸ், டென்10, ஜே.டி., ஆகியவற்றின் மூலம் சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபர்களை சவுந்தர் கண்டு பிடித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
அவர்களிடம் முதலில் வெப் சைட் யூசர் நேம், பாஸ்வேர்ட் உருவாக்கி கொடுத்து அதில் முதலீடு செய்ய பணத்தை பெறுவார். அதன் பின்னர் அவர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப பாயின்ட் கொடுப்பார். அந்த பாயின்ட்டுகளை வைத்து அவர்கள் விளையாடி கொள்ள வேண்டும். தோற்றால் அந்த பாயின்ட் குறைந்து வரும். வெற்றி பெற்றால் பாயின்ட் கூடும். இவ்வாறு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை பலர் சூதாட்டத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். சூதாட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்களிடம் இவர்கள் யாரும் ஆன்லைன் மூலமாக பணத்தை பெறவில்லை. அனைத்தையும் நேரடியாக சென்று வசூல் செய்து வந்துள்ளனர்.
அந்த பணியை விபுல் செய்து வந்துள்ளார். கைது செய்யப்படும் போது ரூ. 1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. ஆனால், இவர்கள் பின்னணியில் பலர் இருப்பதாக தெரிகிறது. இவர்கள் இந்த சூதாட்டத்தை எத்தனை நாட்களாக நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் எவ்வளவு பணம் கைமாற்றப்பட்டுள்ளது. அந்த பணத்தை எவ்வாறு கை மாற்றினார்கள், முக்கிய புள்ளி யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
The post கோவையில் ஐபிஎல் கிரிக்கெட்டை குறிவைத்து ஆன்லைன் மெகா சூதாட்டம் தொழிலதிபர்கள் 7 பேர் கைது: ரூ.1.10 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.