இடைப்பாடி அருகே வீடு புகுந்து பலாத்கார முயற்சியில் பெண் படுகொலை: ஆட்டு வியாபாரி வெறிச்செயல்

இடைப்பாடி: இடைப்பாடி அருகே பலாத்கார முயற்சியில் பெண் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆட்டு வியாபாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் குரும்பப்பட்டி ஊராட்சி காளிகவுண்டன் வளவு பகுதியை சேர்ந்தவர் மாதையன் (50). ஆட்டு வியாபாரியான இவரது மனைவி சின்னப்பொண்ணு(46). இவர்களுக்கு விக்னேஷ்(29) என்ற மகனும், ஜமுனா(25) என்ற மகளும் உள்ளனர். விக்னேஷ், மனைவி கோகுலப்பிரியாவின் தம்பி விபத்தில் இறந்ததால், துக்கம் விசாரிப்பதற்காக சென்று விட்டார்.

மாதையன் சந்தையில் ஆடுகள் வாங்க சென்று விட்டார். இதனால், நேற்று முன்தினம், சின்னப்பொண்ணு மற்றும் பேத்தியான 7 வயது சிறுமி, மாதையனின் அண்ணன் வெங்கடாசலம் இருந்தனர். இரவு 3 பேரும் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றனர். முற்றத்தில் கட்டில் போட்டு வெங்கடாசலம் படுத்திருந்தார். வீட்டிற்குள் பேத்தியுடன் சின்னப்பொண்ணு தூங்கிக் கொண்டிருந்தார். சந்தைக்கு சென்ற மாதையன் நேற்று காலை வீடு திரும்பிய போது, சின்னப்பொண்ணு ஆடைகள் கிழிந்த நிலையில், நகக்கீறல் காயங்களுடன் இறந்து கிடந்தார். சிறுமி கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தாள். வெங்கடாசலத்தை காணவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து கொங்கணாபுரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பலாத்கார முயற்சியில் சின்னப்பொண்ணு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், அருகிலேயே அவரது பேத்தி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, நன்கு அறிமுகமானவர்தான், வீடு புகுந்து வெறிச்செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஆட்டு வியாபாரி காவேரி(43) மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்தனர். நீண்ட நாட்களாக சின்னப்பொண்ணு மீது காவேரிக்கு ஒரு கண் இருந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில், அவரிடம் தொடர்ந்து அத்துமீறியுள்ளார். தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சின்னப்பொண்ணு மறுத்துள்ளார். இந்நிலையில்,வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த காவேரி, தனது மனைவி மற்றும் குழந்தைகளை, தர்மபுரி காலபைரவர் கோயிலுக்கு அனுப்பி வைத்துள்ளார். நேற்று அதிகாலை சின்னப்பொண்ணுவின் வீட்டிற்கு சென்று, முன் முற்றத்தில் படுத்திருந்த வெங்கடாசலத்தை தட்டி எழுப்பி, கொங்காணபுரத்தில் உள்ள சந்து கடையில் மது வாங்கி கொடுத்துள்ளார்.

வயிறு முட்ட மது குடித்த வெங்கடாசலம் அங்கேயே மட்டையான நிலையில், காவேரி மட்டும் திரும்பி வந்து, வீடு புகுந்து படுத்திருந்த சின்னப்பொண்ணுவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால், பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் மறுக்கவே, கழுத்தை பிடித்து நெரித்ததில் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, காவேரியை போலீசார் கைது செய்தனர். சின்னப்பொண்ணுவின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை செய்தபின்தான் பலாத்கார முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது பலாத்காரத்தால் உயிரிழந்தாரா என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

The post இடைப்பாடி அருகே வீடு புகுந்து பலாத்கார முயற்சியில் பெண் படுகொலை: ஆட்டு வியாபாரி வெறிச்செயல் appeared first on Dinakaran.

Related Stories: