சாயர்புரம் அருகே பயங்கரம்; கழுத்தறுத்து மனைவி கொடூர கொலை; கணவர் கைது

ஏரல்: சாயர்புரம் அருகே மனைவியை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே நம்மாழ்வார் நகர் 50 வீட்டை சேர்ந்தவர் மரியசாமுவேல் (61). இவரது மனைவி ஜோஸ்பின்மேரி (57), நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே உள்ள தாம்போதி பாலத்தின் அடிப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோஸ்பின்மேரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி (பொறுப்பு) ஜமாலு சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் கணவன், மனைவி இடையேயான தகராறில் கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் தலைமறைவான மரிய சாமுவேலை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று மஞ்சள்நீர்காயல் பஸ் ஸ்டாப் அருகில் போலீசார் ரோந்து வந்தபோது போலீசாரை பார்த்ததும் மரியசாமுவேல் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:
எனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்து வந்ததால் எங்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினமும் ஏற்பட்ட தகராறில் அவளை அரிவாளால் கழுத்தில் வெட்டி கொலை செய்தேன். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அருகில் உள்ள தாம்போதி பாலத்தின் அடியில் உடலை போட்டு விட்டு தலைமறைவானேன். இவ்வாறு கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் மரியசாமுவேலை தூத்துக்குடி ஜேஎம் 1வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

The post சாயர்புரம் அருகே பயங்கரம்; கழுத்தறுத்து மனைவி கொடூர கொலை; கணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: