சிதம்பரம் அருகே பிறந்து ஐந்தே நாளான பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற பெண் சித்த மருத்துவர் கைது: கிளினிக் நடத்தி கருக்கலைப்பு செய்ததும் அம்பலம்

புவனகிரி: சிதம்பரம் அருகே பிறந்து ஐந்தே நாளான பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்றதாக பெண் சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். அவர் கிளினிக் நடத்தி கருக்கலைப்பு செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சொக்கநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் பிறந்து 5 நாளே ஆன குழந்தை ஒன்று இருந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் கடலூரில் உள்ள சைல்ட்லைன் அமைப்பிற்கு புகார் செய்தனர். பின்னர் அவர்கள் வந்து விசாரித்தபோது அந்த குழந்தையை ரூ.1 லட்சம் கொடுத்து அந்தப் பெண்ணின் உறவினர் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையை மீட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் கடலூர் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் களப்பணியாளர் சித்ராவதி, சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் குழந்தையை விற்ற கடலூர் மாவட்டம், வடலூர், புதுத்தெருவைச் சேர்ந்த சித்த மருத்துவரான சத்யபிரியா (67) என்பவரை போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது, பிரசவம் பார்ப்பது போன்ற பணிகளை செய்து வந்த சித்த மருத்துவர் சத்யபிரியா, தவறான உறவினால் கருத்தரித்து சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணின் குழந்தையைதான் சொக்கநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிந்த போலீசார், சத்யபிரியாவை கைது செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிதம்பரம் தாலுகா போலீசார் சத்யபிரியாவிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. சித்த மருத்துவரான சத்யப்பிரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடலூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்தபோது அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக இவர் மீது வழக்கு பதிவாகி, விசாரணை நடந்து வருவது தெரியவந்தது. மேலும் போலீசார் பரிந்துரையின்பேரில், சத்யபிரியாவின் கிளினிக்கில் மருத்துவ குழுவினர் மூலம் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த சிரிஞ்சுகள், ஊசிகள், கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கைப்பற்றினர்.

சித்த மருத்துவரான இவர் ஊசி, மருந்து மாத்திரைகளை விதிகளை மீறி சிகிச்சைக்காக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இவரது கிளினிக்கில் பிரசவம் பார்ப்பதற்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் மேஜை ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். இதனால் மேலும் பல பெண்களுக்கு இங்கு கருக்கலைப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சத்யபிரியாவுடன் யார், யார் தொடர்பில் இருந்தார்கள்? என்ற விபரத்தை அவரது செல்போன் மூலம் கண்டறிந்து விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சிதம்பரம் அருகே பிறந்து ஐந்தே நாளான பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற பெண் சித்த மருத்துவர் கைது: கிளினிக் நடத்தி கருக்கலைப்பு செய்ததும் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: