உசிலம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி மீது சரமாரி தாக்குதல்: இரு குடும்பத்தினரும் மோதல்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மானூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கொடிச்செல்வன். விவசாயி. இவரது மகன் அய்யர்சாமி (21). இதே ஊரைச் சேர்ந்த பிரபாவதி மகள் கவினாஸ்ரீ (21). உறவினர்களான இருவரும் ஒரே கல்லூரியில் படித்தனர். அப்போது காதல் மலர்ந்தது. ஏற்கனவே இரு குடும்பத்தினருக்கும் இடையே இடத்தகராறில் முன்விரோதம் இருந்து வருவதால், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு உருவானது. இதனால் காதலர்கள் வீட்டில் இருந்து வெளியேறி, அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்கள் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி, இருவரும் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து இரு குடும்பத்தினரையும் அழைத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் இந்த காதல் திருமணத்தை ஏற்க மறுத்தனர். இதையடுத்து சட்டப்படி மேஜர்களான அவர்களின் திருமணத்தை தடுக்க குடும்பத்தினருக்கு உரிமை இல்லை என்று கூறிய போலீசார், பெற்றோரை சமரசம் செய்து அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை அனுப்பினர். ஆனால் வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை பெண் வீட்டார் சரமாரியாக தாக்கினர்.
தடுத்த அய்யர்சாமியின் குடும்பத்தினரும், பெண் வீட்டாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அவர்களை தடுத்தனர். தாக்குதலில் மணமகனின் தந்தை கொடிச்செல்வம் காயமடைந்ததால், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக பெண்ணின் தாயார் பிரபாவதி, பாட்டி பவுன்தாய் உள்ளிட்ட சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உசிலம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி மீது சரமாரி தாக்குதல்: இரு குடும்பத்தினரும் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: