ராமநத்தம் அருகே அனுமதி இன்றி பனை மரத்தில் கள் இறக்கிய 2 பேர் கைது

திட்டக்குடி : ராமநத்தம் அருகே அரசு அனுமதி இன்றி பனை மரத்தில் கள் இறக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள லக்கூர் கிராமத்தில் ம.புடையூர் செல்லும் காட்டுப் பகுதியில் உள்ள பனை மரங்களில் அரசு அனுமதி இன்றி கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, தனி பிரிவு காவலர் அருண், தலைமை காவலர் ஆனந்த், போலீசார் பாரதி, ஸ்டாலின் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்குள்ள பனை மரங்களில் கள் இறக்கிக் கொண்டிருந்த லக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (49), சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (56) ஆகிய இருவரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 5 லிட்டர் கள், 10 மண் பானைகள், கள் இறக்க பயன்படுத்தும் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

The post ராமநத்தம் அருகே அனுமதி இன்றி பனை மரத்தில் கள் இறக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: