‘‘விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் சீரடி சாயிநாதரும்’’

பாண்டவர் குலத்தில் நான்கு தலைமுறைக்குப்பின் சதாநீகன் அரசாட்சி ஏற்று சிறியதை பெரியது நலியாதவாறு ஆட்சி புரிந்தான். தன்னுடைய குடிகள் நற்பேறு பெறுவதற்கு சௌநக முனிவரை நாடி, ‘மண்ணுலக மக்கள் பிறவிக்கடலிலிருந்து கரை சேர வழி ஒன்றினைக் காட்டியருள வேண்டும்’. என்று கேட்டான். அதற்கு அவர் ‘‘இதுவோ கலிகாலம். மக்கள் தீவினைகள் பல செய்தவர்களாய் இருக்கின்றனர். ஆதலால் பகவானின் திருப்பெயர் ஓதுவதற்கன்றிப் பிறிதொன்றுக்குத் தகுதியானவர்கள் இல்லை. எனவே, பகவானின் திருப்பெயரை ஓதுவதே இவர்களின் ஈடேற்றத்திற்கு வழி’ என்றார்.

‘‘திருப்பெயர் சொல்வதால் உண்டாகும் இன்பத்தை விடுத்து பரமபதத்தில் இருக்கும் இன்பமே கிடைத்தாலும் வேண்டேன்’’ என்பது தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை திருவாக்கு.
‘‘இச்சுவை தவிர நான் போய்இந்திரலோகம் ஆளும்அச்சுவை பெறினும் வேண்டேன்”லௌகீகமான வார்த்தைகளை விட (உலக இயல்பு வார்த்தைகள்) விஷ்ணு நாம சங்கீர்த்தனம் முக்கியமானது. ‘‘லௌகிகாத் வசனான் முக்யம் விஷ்ணு நாமானு கீர்த்தனம்.’’

ஆதிசங்கரர் லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு விரிவுரை எழுத வேண்டும் என்று நினைத்த போது ஒரு சிறு குழந்தை விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தையே கொண்டு வந்து கொடுத்ததாகவும் எனவே இதுதான் இறைவியின் திருவுளம் என நினைத்து விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு வியாக்யானம் செய்ததாகவும் கர்ண பரம்பரை கதை ஒன்று கூறுகிறது.

‘‘ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு
உறுதுயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை’’
என்பது திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி.
‘விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு: I
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந: II

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் ஸ்லோகமாகச் சொல்லப்படுவது. இந்த முதல் ஸ்லோகத்தில் உள்ள ஒன்பது நாமாவளிகளிலேயே ஆயிரம் நாமாக்களின் அம்சங்கள் அடங்கிவிட்டன என்று கூறுவர் வைணவப் பெரியோர்.புவனங்களைப் படைத்து, உயிரினங்கள் யாவற்றிலும் எக்காலத்தும் கலந்து நின்று போஷிப்பவன், காப்பவன் விஷ்ணு. யாவும் அவனிடம் தோன்றி, வாழ்ந்து, அவனிடமே லயமாகின்றன.

‘‘தன்னுள்ளே உலகங்கள் எவையும் தந்து அவை
தன்னுள்ளே நின்று தான் அவற்றுள்
தங்குவான்பின் இலன் முன் இலன் ஒருவன் பேர்கிலன்
தொல் நிலை ஒருவரால் துணியற்பாலதோ’’

‘‘ஒப்பற்ற முழுமுதற்கடவுள் தன்னுளிருந்து எல்லா உலகங்களையும் உண்டாக்கி, அவற்றுக்குள்ளே தான் பல வடிவமெடுத்து நின்று அவற்றினுள் தங்குவான். பின்னும் முன்னும் இல்லாதவன். அவனுடைய தொல்பெருமையை ஒருவரால் துணிந்து சொல்லக் கூடுமோ’’ என்பது கம்பராமாயணத்தில் கம்பரின் வாக்கு.இவ்வாறு ஒன்பது நாமங்களும் அவனுடைய சர்வ வியாபகத்தைக் குறிப்பது போல, விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் சில நாமங்களைக் கொண்டு அவன் சீரிய குணங்களை எடுத்துக்காட்ட உருவகக் கதைகளாக வியாக்யானம் செய்தவர்களால் மிகச் சிறப்பாகவும் அருமையாகவும் சிறந்தெடுத்து ஓதப்படுகின்றன.

அவ்வகையில், பர்ஜன்ய: – மேகமாய் இருப்பவர் (810); அநில: – காற்றாய் இருப்பவர் (812); குமுத: – பூமியை மகிழ்விப்பவர் (807); மஹாஹ்ரத: – ஆனந்த வெள்ளம் நிரம்பிய மடுவாய் இருப்பவர் (803); குந்தர: – குந்தமலர் போன்ற சுத்தமான தர்ம பலன்களை யளிப்பவர் (808); பாவன: – தம்மை நினைத்த மாத்திரத்தில் பரிசுத்தமாக்குபவர் (811) அம்ருதாஸ: – ஆனந்தமென்னும் அமுதை உண்பவர் (813); அம்ருதவபு: – அழியாத தேகமாய் இருப்பவர் (814). என்னும் நாமங்களின் வழி வியாக்யான உருவகக் கதை (Allegory) ஒன்றைக்
காணலாம்.

பகவான் மேகமாகவும், காற்றாகவும் இருந்து ஜீவர்களின் பிறவித் துன்பத்தைப் போக்கி (வெப்பத்தைப் போக்கி) இன்பத்தைத் தரும் மழையாய் மேலிருந்து கீழிறங்கி பூமியை மகிழ்விக்கிறார். அந்த ஆனந்த வெள்ளத்தை தேக்கி வைத்திருக்கும் பெரிய மடுவாய் விளங்குபவரும் அவரே. ‘‘பொல்லாதவருக்கு மூழ்கும் தடாகமாகவும், நல்லோருக்கு நீராடும் நீர் நிலையாகவும்
இருப்பவன்’’ என்பார் ஆதிசங்கரர்.

‘‘துயர் கெடும் கடிது; அடைந்து வந்து
அடியவர்! தொழுமின்
உயர் கொள் சோலை ஒண்தடம் அணி ஒளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்தது
தயரதன் பெற்ற மரகத மணித்
தடத்தினையே’’

திருமோகூர்ப் பெருமானை மரகதமயமான அழகிய குளமாக உருவகம் செய்கிறார் நம்மாழ்வார். கொடிய அரக்கர்களை மாய்த்த தசரதன் பெற்ற ‘மரகத மணித் தடாகம்’ போன்றவனை திருமோகூரில் தொழுதால் உங்கள் துயரங்கள் யாவும் விரைவிலேயே நீங்கிவிடும்.அப்படிப்பட்ட நீர்நிலையாக விளங்கும் பெருமானிடத்தில் அன்புகொண்ட சான்றோர்கள் நீராடும்போது, அவன் அச்சான்றோர்களின் பாவத்தை நீக்கி (பாவந:) பரிசுத்தப்படுத்துகிறான். அந்த அழகிய தடாகத்தில் ஆனந்தமென்னும் அமுதை ஒரு துளி அருந்திய மாத்திரத்தில் (அம்ருதாஸ:), அவர்கள் அழியாத தேகத்தைப் பெற்று (அம்ருதவபு:), எப்போதும் பிரகாசிக்கும் ஸ்வரூபத்தைப் (ஸதாயோகி) பெறுகின்றனர்.

இவ்வாறு இம்மைக்கு மழைத்துளியாகவும், மறுமைக்கு அமுதத் துளியாகவும் இருந்து நம்மை காக்கின்றான் பெருமான் என்பது விளங்கும்.மாணிக்கவாசகப் பெருமானும் தாம் அருளிய திருவெம்பாவையில் இறைவனையும் இறைவியையும் ‘பொங்குமடு’ என்றே உருவகப்படுத்துகிறார்.

‘‘பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குறுகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்குமடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து….
பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்”

தங்களுடைய உடல் அழுக்கையும், உயிர் அழுக்கையும் தீர்க்க வேண்டி வரும் மேன்மைமிக்க உயிர்கள் நீராடுவதற்காகவே, இறைவியும் இறைவனும் நீர் பொங்குகின்ற பொங்கு மடுவைப் போல இருந்து அருள்பாலிக்கின்றனர். அப்படிப்பட்ட தாமரை மலர்கள் உள்ள மடுவில் புகுந்து நீராட வருவாயாக. எப்பொருளையும் இறைவனாகக் காணும் சிறப்பில் இங்கு ‘பொங்கு மடு’ மாதொரு பாகனாகக் கூறப்பட்டது என்பது சைவ அறிஞர் கருத்து.

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில், வத்ஸல: – பக்தர்கள் இடத்தில் பேரன்பு உடையவர் (471) என்றும் நாமத்திற்கு, ‘தனது அன்பருக்கு அன்பாக ஆகுபவன் பெருமான்’ என்பதை விளக்குமிடத்து ‘சுவடுபட்ட இடத்தில் புல்மேயாத பசு, தான் கன்று ஈன்றபோது, கன்றின் மேல் உள்ள வழும்பை (அழுக்கை) அன்புடன் நாக்கால் நக்கி விலக்குவது, நம் தோஷத்தையும் (அழுக்கையும்) இனிதாகக் கொண்டு விலக்குவான் போன்றது அன்றோ’ என்று வைணவப் பெரியோர்கள் கூறுமிடம் நமக்கு கண்ணீரை வரவைப்பதாகும்.

பாபா தமது பெயரையே நினைவில் வைக்கும் படியும் தம்மிடமே சரணாகதி அடையும்படிக் கேட்டுக் கொண்டாலும் சிலருக்கு உபதேசங்கள் செய்யும் போது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கொடுத்து தினந்தோறும் பாராயணம் செய்யும்படிக் கேட்டுக் கொள்வார். ஒருமுறை ஒரு ராமதாஸி (மகான் ஸமர்த்த ராமதாஸரின் பக்தர்) சீரடிக்கு வந்து சில காலம் தங்கியிருந்தார். அவர் தினந்தோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம், அத்யாத்ம ராமாயணம் ஆகிய புனித நூல்களை நம்பிக்கையுடன் படிப்பார்.

பாபா ஷாமாவிற்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கொடுத்து அவருக்கு அருள்செய்ய விரும்பினார். எனவே, ராமதாஸியை அழைத்து தனக்கு வயிற்றுவலி உள்ளதால் பேதி மருந்து வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பினார். பின்னர் பாபா ராமதாஸி இருக்குமிடத்திற்கு வந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை எடுத்துக் கொண்டு ஷாமாவிடம் வந்து ‘‘ஓ! ஷாமா, இப்புத்தகம் மிகவும் பயனுள்ளது. பலனுள்ளது. எனவே இதை உனக்குப் பரிசளிக்கிறேன்.

ஒருமுறை நான் தீவிரமாக கஷ்டப்பட்டேன். எனது இதயம் துடிக்கத் தொடங்கி, உயிர் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்தேன். அந்த நேரத்தில் இந்தப் புத்தகத்தை என் மார்போடு வைத்து அணைத்துக் கொண்டேன். அப்போது அது எத்தகைய ஆறுதலை அளித்தது. அல்லாவே என்னைக் காப்பாற்ற கீழிறங்கி வந்தாரென்று நினைத்தேன். எனவே, இதை உனக்குக் கொடுக்கிறேன். மெதுவாகப் படி. தினந்தோறும் குறைந்தபட்சம் ஒரு நாமத்தையாவது படி. அது உனக்கு நன்மை செய்யும்’ என்றார். ‘இது ராமதாஸியின் புத்தகம். இதிலுள்ள சம்ஸ்கிருத எழுத்துக்கள் எனக்குப் படிக்கத் தெரியாது’ என்று பதில் சொன்னார் ஷாமா.

ஷாமா ஒரு படிக்காதவராக இருந்தபோதும் அவருக்கு இப்புத்தகத்தைக் கொடுத்து அவரைத் துன்பங்களிலிருந்து விடுவிக்க பாபா எண்ணியிருக்க வேண்டும். இறைவனின் திருநாமங்களைச் சொல்வதற்கு எவ்வித சடங்குமுறைகளோ, தடையோ கிடையாது. அது மிகச் சுலபமான வழி. எனவே, ஷாமா இந்தச் சாதனையில் ஆர்வம் காட்டாது இருந்தாலும் இதனை அவர் மேல் திணித்தார் என்று சொல்ல வேண்டும். ஏக்நாத் மஹராஜ் இதே விதமாக ஒரு ஏழையிடம் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கொடுத்து அந்த ஏழையைக் காப்பாற்றினார் என்று அறிகிறோம். அதைப் போலவே ஷாமாவையும் பாபா காப்பாற்ற நினைத்தார் என்று கொள்ளலாம்.

சிறிது நேரத்தில் ராமதாஸி திரும்பி வந்தபோது ஷாமாவிடம் அந்தப் புத்தகத்தைப் பார்த்து கோபம்கொண்டார். அதற்கு பாபா, ‘ஓ! ராமதாஸி! நீ தினந்தோறும் புனித நூல்களைப் படித்தும் மனம் தூய்மை இல்லாமல் இருக்கிறாய். மமதா (பற்று) இருக்கக் கூடாது. சமதா (எல்லோரையும் ஒன்று என பாவிக்கும் பண்பு) இருக்க வேண்டும். ஷாமாவுக்கு நான் தான் அதைக் கொடுத்தேன்’’ என்றார். ராமதாஸி அமைதியானார். முடிவாக ராமதாஸி ஷாமாவிடமிருந்து ‘பஞ்சரத்னி கீதை’ ஒன்றை பெற்றுக் கொண்டார்.

இப்படியொரு நிகழ்ச்சி நடந்திராவிட்டால் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மகிமையை நாம் அறிந்துகொண்டிருக்க முடியாது. அது எங்ஙனம் பாபாவிற்கு தக்க சமயத்தில் உதவி புரிந்தது என்பதையும் நாம் தெரிந்திருக்க இயலாது. இவ்விஷயத்தில் பாபாவின் கற்பிக்கும் முறையும் அதனை ஆரம்பித்து வைக்கும் முறையும் விசேஷமானது என்பதை அறியலாம். பின்னர் ஷாமா விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்து புனே பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் C.G. நார்கே என்பவருக்கு அதை விவரித்துச் சொல்லும் அளவுக்கு அதில் வல்லமை பெற்றார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பழமையும் முதன்மையும் வாய்ந்த ‘சரக சம்ஹிதை’ என்னும் ஆயுர்வேத நூல் நோய்களின் வகைகளையும் அதற்குரிய மருந்தின் வகைமைகளையும் கூறுகிறது. நோய்க்குரிய மருந்தை எடுத்துக் கொண்டாலும் நிறைவாக விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும் என்று சிறப்பாக எடுத்தோதுகிறது.சாயிநாதர் அருள்பாலிக்கும் சீரடி என்னும் பொங்கு மடுவில் அமிருதமயமான அருள்துளியைப் பருகி ஆயுள் ஆரோக்கியம் பெறுவோமாக. சாயி சரணம்.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post ‘‘விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் சீரடி சாயிநாதரும்’’ appeared first on Dinakaran.

Related Stories: