பாலக்கோடு அருகே பயங்கரம் கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்து கோழிக்கடைக்காரர் கொடூர கொலை: மனைவியின் தகாத உறவை கண்டித்ததால் மர்ம நபர்கள் வெறிச்செயல்?


பாலக்கோடு: பாலக்கோடு அருகே கோழிக்கடைக்காரர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (42). இவருக்கு திருமணமாகி முதல் மனைவியை பிரிந்த நிலையில் 2வதாக கோவிந்தம்மாள் (40) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 15 மற்றும் 8 வயதில் மகள்கள் உள்ளனர். குமார், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே கோழிக்கடை வைத்திருந்தார். இவருக்கு உதவியாக கோவிந்தம்மாளும் கடைக்கு சென்று வந்துள்ளார். அப்போது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலருடன் கோவிந்தம்மாளுக்கு தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த குமார், மனைவியை கண்டித்துள்ளார். தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் உறவை கைவிடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு குமார், கோழி கடைக்கு தூங்க சென்றார். இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. சந்தேகமடைந்த அவரது தாய், கடைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்றனர். இதுபற்றி பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு விசாரித்தனர். அதில், குமாரின் கடைக்குள் நள்ளிரவு புகுந்த மர்மநபர்கள் அவரது கை, கால்களை கட்டிபோட்டும் கழுத்தை நெரித்தும் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.

அதில், மனைவியின் தகாத உறவை குமார் கண்டித்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து கோவிந்தம்மாள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பாலக்கோடு அருகே பயங்கரம் கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்து கோழிக்கடைக்காரர் கொடூர கொலை: மனைவியின் தகாத உறவை கண்டித்ததால் மர்ம நபர்கள் வெறிச்செயல்? appeared first on Dinakaran.

Related Stories: