நேற்று காலை 9.45 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி திருவனந்தபுரம் விமானப்படை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழிஞ்ஞத்திற்கு சென்றார். சிறிது நேரம் துறைமுகத்தை பார்வையிட்டார். அப்போது துறைமுகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன் பின்னர் துறைமுகத்திற்கு வந்த எம்எஸ்சி நிறுவனத்தின் செலஸ்டீனோ மரஸ்கா என்ற சரக்கு கப்பலுக்கு அவர் வரவேற்பு அளித்தார். தொடர்ந்து விழிஞ்ஞம் துறைமுக தொடக்க விழா நடைபெற்றது. துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசியதாவது: விழிஞ்ஞம் இந்தியாவின் முதல் தாய் துறைமுகமாகும். சரக்கு போக்குவரத்து துறைமுகமான விழிஞ்ஞத்தின் திறன் வரும் காலத்தில் மூன்று மடங்காக உயரும். அதன் பின்னர் உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இங்கு வரத்தொடங்கும். இவ்வளவு நாள் இந்தியாவுக்கு வெளியே உள்ள துறைமுகங்கள் மூலம் தான் 75 சதவீதத்திற்கும் அதிகமான சரக்குகள் கொண்டு வரப்பட்டன.
இதன் மூலம் நம் நாட்டுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு வந்தது. விழிஞ்ஞம் துறைமுகத்தின் மூலம் இதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டின் பணம் நமக்கே கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருந்த பணம் இனி விழிஞ்ஞம் துறைமுகத்தின் மூலம் கேரளாவுக்கும், நம் நாட்டுக்கும் வரும். விழிஞ்ஞம் துறைமுகத்தால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும். இந்த துறைமுகத்தை நான் சுற்றிப் பார்த்தேன். குஜராத்தில் கடந்த 30 வருடங்களாக அதானி துறைமுகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அதைவிட பெரிய துறைமுகமாக விழிஞ்ஞம் உருவாகியுள்ளது. இது குஜராத் மக்களுக்கு அதானி குழுமத்தின் மீது எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. நம் நாட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அரசு, தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.
கேரள துறைமுக அமைச்சர் பேசும்போது தனியாருக்கு தொழில்துறையில் அதிக ஊக்கமளிக்க வேண்டும் என்று அதானியை சுட்டிக்காட்டி பேசினார். ஒரு கம்யூனிஸ்ட் அமைச்சர் தான் இவ்வாறு பேசினார் என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். இது இந்தியா மாறி வருகிறது என்பதற்கான ஒரு அடையாளமாகும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால், கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன், ஒன்றிய இணை அமைச்சர்கள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன் உள்பட கேரள அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவுக்கு பின்னர் நண்பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் அமராவதி புறப்பட்டு சென்றார்.
The post கேரளாவில் ரூ.8686 கோடியில் அமைக்கப்பட்ட விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் நாட்டுக்கு அர்ப்பணம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.