டெல்லி : பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீரில் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணகள் உயிரிழந்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை இந்தியா தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகள் இடையே போர் பதற்றமும் அதிகரித்து வருகிறது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 9வது நாளாக தொடர்ந்து சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த நிலையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,” பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது, மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு விதிவிலக்கு தேவை என்றால் மத்திய அரசின் முன் ஒப்புதல் அவசியம்,”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லக் கூடாது எனவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
The post பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! appeared first on Dinakaran.