அமராவதி தலைநகர் பணி விரைந்து முடிக்க மாநில அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும்: அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேச்சு

திருமலை: ஆந்திர மாநிலம் அமராவதி தலைநகர் பணிகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் இந்த பணிகளுக்கான மறுதொடக்க விழா அமராவதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்தது. துணை முதல்வர் பவன்கல்யாண் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்துகொண்டு அமராவதியின் வளர்ச்சி பணிகள், மத்திய அரசின் ரயில்வே, சாலை, டிஆர்டிஓ ஏவுகணை சோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:

அமராவதி தலைநகர் ஆந்திராவிற்கு புதிய சக்தியை கொடுக்கும். ஒவ்வொரு மக்களுக்கும் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கிரீன் எனர்ஜி, கிளீன் சிட்டி ஆகியவற்றுடன் இந்த தலைநகர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க மாநில அரசுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் மத்திய அரசின் மூலம் வழங்கப்படும். ஆன்மீக நகரங்களை இணைக்கும் விதமாக ரேணிகுண்டா-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக விஜயவாடா, ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி பாலாஜி கோயிலுக்கு சுலபமாக செல்ல முடியும்.

இந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி விசாகப்பட்டினத்தில் மிகப்பிரமாண்டமாக யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த உலக யோகா தினத்தில் விசாகப்பட்டினத்தில் நான் உள்பட அனைவருடன் இணைந்து யோகா செய்வோம். இதனை உலக சாதனையாக மாற்ற வேண்டும். இதற்கு அடுத்த 50 நாட்கள் ஊர் ஊராகவும், கிராமமாக யோகாவின் முக்கியத்துவம் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கவர்னர் அப்துல் நசீர், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, அமைச்சர் நாராலோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அமராவதி தலைநகர் பணி விரைந்து முடிக்க மாநில அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும்: அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: