குன்னூர், ஏப்.4: குன்னூரில் 1 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் படிக்கட்டுகள், சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளான வெலிங்டன், காட்டேரி, பர்லியார், வண்டிச்சோலை உட்பட குன்னூர் நகரப்பகுதிகளில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே படிக்கட்டுகள், சாலைகள் என பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக குன்னூர் சாமண்ணா பூங்கா பகுதியிலிருந்து மோர்ஸ் கார்டன் செல்லும் படிக்கெட்டில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குன்னூர் – ஊட்டி சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த மழை, தேயிலை மகசூலுக்கு ஏற்ற மழை என்பதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் குளு குளு கால நிலை நிலவியது.
The post குன்னூரில் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கன மழையால் படிக்கட்டுகளில் கரை புரண்ட வெள்ளம் appeared first on Dinakaran.