கேத்தி பாலாடா பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

 

ஊட்டி, ஏப். 5: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடா பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, பல ஏக்கர் பரப்பளவில் காய்கறி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் இருந்து குன்னூர், ஊட்டி போன்ற பகுதிகளுக்கு செல்வதற்காக பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து இப்பகுதியில் பயணியர் நிழற்குடைக்கு அருகில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. சமீப காலமாக குடிமகன்கள் சிலர் அருகாமையில் உள்ள மதுகடையில் இருந்து மதுவை வாங்கி வந்து நிழற்குடைக்குள் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.

மேலும், மது அருந்தி விட்டு மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களையும் உள்ளே வீசி செல்வதால், நிழற்குடைக்குள் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், பெண்கள் நிழற்குடைக்குள் நிற்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். பயணியர் நிழற்குடைக்கு அருகில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கேத்தி பாலாடா பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கேத்தி பாலாடா பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: