அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIன் கீழ் ரூ.1087 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II க்கு ரூ.1087 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெறும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் நோக்கில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ், வரும் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 முதல் 2025-26 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதில், 2025-26-ம் ஆண்டில் 2,338 கிராம ஊராட்சிகளில் ரூ.1,091.38 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில், அரசுக்கு ஊரக வளர்ச்சி ஆணையர் அனுப்பிய கடிதத்தில், முந்தைய ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தின் 7 கிராமங்கள், புதுக்கோட்டை, நாமக்கல்லில் தலா ஒரு கிராமம் என 9 கிராமங்கள் தவிர்த்து 2,329 கிராம ஊராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.1087 கோடி நிதி ஒதுக்க கோரினார். இதை ஏற்ற தமிழக அரசு, நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டது.

The post அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIன் கீழ் ரூ.1087 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Related Stories: