களக்காட்டில் சோலார் மின் வேலிகள் பராமரிக்கப்படாததால் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு

*குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

களக்காடு : சோலார் மின்வேலிகள் பராமரிக்கப்படாததால் தான் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக களக்காட்டில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகத்தில் வனத்துறை சார்பில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

துணை இயக்குநர் ரமேஷ்வரன் தலைமை வகித்தார். வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், திருக்குறுங்குடி யோகேஸ்வரன், வனவர் மதன்குமார் முன்னிலை வகித்தனர்.

விவசாயி பாலன் பேசுகையில் ‘‘மஞ்சுவிளை, வடகரை, சிதம்பரபுரம் பகுதிகளில் மட்டும் விளைநிலங்களை சீர் செய்ய ஜேசிபி இயந்திரம் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதிக்கின்றனர். ஆனால் மற்ற பகுதிகளில் மலையடிவாரம் வரை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நிலங்களை சீரமைத்து வருகின்றனர்.

இதனை வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில பகுதிக்கு மட்டும் தடை விதித்துவிட்டு மற்ற பகுதிகளுக்கு தடை விதிக்காமல் அனுமதி அளிப்பது ஏன்?. வனத்துறையினரின் இந்த தடையால் சொட்டுநீர் பாசனம் கூட போடமுடியவில்லை. விவசாயத்தை ஊக்குவிப்போம் என்று அரசு கூறுகிறது.

ஆனால் இங்கு விவசாயம் அழிக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலிகள் பராமரிக்கப்படாதது தான் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரிக்க காரணமாகும்’’ என்றார். இதற்கு பதிலளித்த துணை இயக்குநர் ரமேஷ்வரன் ‘‘இயற்கையும் அவசியம், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். ஜேசிபிக்கு அனுமதி வழங்கினால் மரத்தை வெட்டி விடுவார்கள்’’என்றார்.

நகராட்சி கவுன்சிலர் சிம்சோன் துரை பேசுகையில் ‘‘அப்படி வெட்டினால் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அதை விட்டு விட்டு, ஒரு சிலர் செய்யும் தவறுக்காக அனைத்து விவசாயிகளையும் சங்கடப்படுத்துவதா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

முத்துக்குட்டி பேசுகையில் ‘‘எனது தோட்டத்தில் வாழைகளை யானைகள் நாசம் செய்து விட்டது. இதற்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை. அதுபோல் 4 தென்னைகளையும் யானைகள் சாய்த்து விட்டன.

இதற்கு வருவாய்துறையினரிடம் சான்றிதழ் வாங்கி, இழப்பீடுக்கு விண்ணப்பிக்க அலைய வேண்டியதுள்ளது. இதற்கு செலவு செய்யும் தொகை கூட இழப்பீடாக கிடைப்பதில்லை’’ என்றார். மேலும் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

6 பேர் மட்டுமே பங்கேற்பு

களக்காட்டில் வனத்துறை அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பது வழக்கம். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் 6 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

The post களக்காட்டில் சோலார் மின் வேலிகள் பராமரிக்கப்படாததால் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: