திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. எனவே, கோடைகால குடிநீர் பிரச்சனையை தவிர்க்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தின் நீராதாரத்துக்கு கைகொடுக்கும் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் கடந்த ஆண்டு போதமான அளவு பெய்தது. ஆண்டு இறுதியில் எதிர்பாராமல் பெய்த பெஞ்சல் புயல் மழையால் அணைகள், ஏரிகள், பாசன கிணறுகள் நிரம்பின.
ஆனாலும், கோடை காலம் தொடங்கம் முன்பே திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக 100 டிகிரியை வெயில் நெருங்கியிருக்கிறது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் வெகுவாக அதிகரிக்கும் என தெரிகிறது.
எனவே, ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்கு பிறகு கோடையின் தாக்கம் அதிகரிக்கும். அப்போது, நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக சரியும். எனவே, கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளையும் மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியிருக்கிறது.
அதன்படி, அனைத்து கிராமப்பகுதிகளிலும் உள்ள குடிநீருக்கான ஆதாரம் குறித்த அறிக்கை ஊராட்சி செயலாளர்கள் மூலம் பெறப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டுகளில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்ட பகுதிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, ஊரக பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது தனி அலுவலர்கள் நிர்வாகத்தில் உள்ளது.
எனவே, கிராமப்பகுதிகளுக்கு அலுவலர்கள் நேரில் சென்று, குடிநீர் பிரச்சனைகள் குறித்து கள ஆய்வு நடத்தி தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா, பைப்லைன்கள் பழுது பார்த்தல், மின் மோட்டார் சீரமைப்பு போன்றவற்றில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஏரி, அணைகளின் நீர்மட்டம் குறைந்தது
சுட்டெரிக்கும் வெயிலால் அணைகள், ஏரிகள், கிணறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிய தொடங்கியிருக்கிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்ளில் நீராதாரமாக திகழும் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 108 அடியாக குறைந்திருக்கிறது.
அணையில் இருந்து தற்போது தென்பெண்ணை வழியாக வினாடிக்கு 900 கன அடியும், இடது மற்றும் வலதுபுற கால்வாய் வழியாக 520 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
எனவே, அணையின் நீர்மட்டம் அடுத்த சில வாரங்களில் வெகுவாக குறையும். அதேபோல், குப்பனத்தம், செண்பகத்தோப்பு, மிருகண்டா அணைகளின் நீர்மட்டமும் குறைய தொடங்கியிருக்கிறது.
அதேபோல், ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படும் திருவண்ணாமலையில், கோடை காலத்தின் தொடக்கத்திலேயே பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் குறைந்திருக்கிறது.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் கடும் வெயில் appeared first on Dinakaran.