திருவண்ணாமலை, மார்ச் 19: திருவண்ணாமலை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சதவீத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ₹8.50 லட்சம் செலவில் சிறப்பு வினா விடை வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மேலும், வினா விடை தொகுப்பு அடிப்படையில் தினமும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார். அதன்படி, திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் வேடியப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு நேரில் சென்று கலெக்டர் பார்வையிட்டார். அப்ேபாது, கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வினா விடை தொகுப்பு பயனுள்ளதாக இருக்கிறதா என மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், எந்தெந்த பாடங்களில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என கண்டறிந்து, அதில் சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற தேவையான அனைத்து முயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ேசா.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
The post மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் கலெக்டர் நேரில் ஆய்வு 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க appeared first on Dinakaran.